பிரச்சினைகளுக்கு ராணுவ மோதல் தீர்வல்ல: மோடி

பிரச்சினைகளுக்கு ராணுவ மோதல் தீர்வல்ல: மோடி

2 mins read
34e78b2e-ca58-4799-aeab-8f2aa0b65a95
பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் அரசுமுறைப் பயணமாக இந்தியா சென்றுள்ளார். அங்கு பிரதமர் மோடியை அவர் சந்தித்துப் பேசினார். - படம்: நியூஸ்ஆன் ஏர்

புதுடெல்லி: எந்த ஒரு பிரச்சினைக்கும் ராணுவ ரீதியிலான மோதல் மட்டுமே தீர்வாக இருக்க முடியாது எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இக்கருத்தை இந்தியாவும் பின்லாந்தும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டதாக அவர் கூறியுள்ளார்.

பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் அரசுமுறைப் பயணமாக இந்தியா சென்றுள்ளார். அங்கு பிரதமர் மோடியை அவர் சந்தித்துப் பேசினார்.

இதையடுத்து, வெளியிடப்பட்ட அறிக்கையில், தற்போது உலகம் நிச்சயமற்ற தன்மையின் ஒரு கட்டத்தைக் கடந்து வருவதாக திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.

உலகெங்கும் பல நாடுகள் தொடர்ந்து மோதிக்கொள்ளும் வேளையில், இந்தியாவும் ஐரோப்பாவும் தங்கள் உறவுகளின் பொற்காலத்தில் நுழைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இருதரப்புக்கும் இடையிலான வளர்ந்து வரும் ஒத்துழைப்பு உலகளாவிய நிலைத்தன்மை, வளர்ச்சி, பகிரப்பட்ட வளத்தை வலுப்படுத்துவதாகக் கூறியுள்ளார்.

“உக்ரேன், மேற்கு ஆசியா என உலகின் எந்தப் பகுதியில் மோதல் ஏற்பட்டிருந்தாலும், அதை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்தியாவும் பின்லாந்தும் ஆதரிக்கும்.

“2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில், வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த ஒப்பந்தம் இந்தியாவிற்கும் பின்லாந்திற்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும்,” என்று திரு மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஈரான் மோதலை நிறுத்த வேண்டும் என வலியுறுத்திய அவர், உலகளாவிய நிறுவனங்களில் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவது அவசியம் என்றார்.

எதார்த்தமான உலகக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ள இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைத் தாம் வெகுவாக மதிப்பதாக அதிபர் ஸ்டப் தெரிவித்தார்.

நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு புதன்கிழமை (மார்ச் 4) சென்ற பின்லாந்து அதிபர் ஸ்டப், இந்திய அதிபர் திரௌபதி முர்மு, துணை அதிபர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோரையும் சந்திக்க உள்ளார்.

குறிப்புச் சொற்கள்