போபால்: மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மங்கிலால் என்ற யாசகருக்கு உள்ள சொத்துகள் குறித்த விவரங்களைக் கேட்கும் அனைவரும் வாய்பிளக்காமல் இருந்தால் அதுதான் வியப்பான செய்தி.
இந்தூர் நகரில் வசித்துவரும் அவருக்குச் சொந்தமாக மூன்று வீடுகள் உள்ளன. மேலும், கார், ஆட்டோக்கள் எனப் பல வாகனங்களை வாங்கி வாடகைக்கு விட்டுள்ளார்.
அது மட்டுமல்ல, தனக்கு பிச்சை போடுபவர்களுக்கே வட்டிக்குப் பணம் கொடுக்கிறார் இந்தத் தாராள மனம் கொண்ட கோடீஸ்வர யாசகர்.
மங்கிலாலுக்கு 50 வயதாகிறது. பல ஆண்டுகளாகத் தொழு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்தூரின் பரபரப்பான சந்தைப் பகுதியில் மரக்கட்டையால் ஆன சிறு சக்கரங்கள் கொண்ட வண்டியில் அமர்ந்து கைகளில் காலணிகள் தேய்த்தபடி யாசகம் கேட்கும் அவர், அந்தப் பகுதியில் அனைவருக்கும் தெரிந்த நபர்.
இந்நிலையில், இந்தூர் மாவட்ட நிர்வாகம் அண்மையில் யாசகம் ஒழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட போதுதான் மங்கிலால் சொத்து விவரங்கள் குறித்து அனைவருக்கும் தெரிய வந்தது.
அவருக்கு மூன்று கான்கிரீட் வீடுகள் உள்ளன. அதில் ஒன்று, மூன்று மாடிகள் கொண்ட பெரிய கட்டடமாகும். இந்தூரிலேயே மேலும் இரண்டு வீடுகளை வாங்கியுள்ளார்.
தனக்குச் சொந்தமான காரில்தான் பிச்சை எடுக்கும் இடத்துக்குச் சென்றுவருகிறார். இதற்காக ஓர் ஓட்டுநரும் வைத்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
மூன்று ஆட்டோக்களை வாங்கி, வாடகை அடிப்படையில் கொடுத்துள்ளார்.
மங்கிலால் ஏறக்குறைய ஐந்து லட்சம் ரூபாயை வட்டிக்கு கொடுத்துள்ளார் என்றும் யாசகம் மூலம் நாள்தோறும் ரூ.500 வரை சம்பாதிக்கிறார் என்றும் பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அதிகாரி தினேஷ் மிஸ்ரா கூறுகிறார்.
இந்நிலையில், இந்தூர் மாவட்டம் யாசகர்கள் இல்லாத நகரமாக மாற்றப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ள ஆட்சியர் சிவம் வர்மா, மங்கிலால் தொடர்பான தகவல்களைச் சரிபார்த்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
இந்தியாவின் தூய்மையான நகரமாக விளங்கி வருகிறது இந்தூர். பத்து ஆண்டுகளாக இந்தப் பெருமையைத் தக்கவைத்து வரும் இந்தூரில் தற்போது யாசகர்கள் இல்லாத நகரமாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுவரை 6,500 யாசகர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் மங்கிலால் உள்ளிட்ட 1,600 பேர் மீட்கப்பட்டு ஆசிரமங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


