சுரங்கப் பாதுகாப்பு: இஸ்‌ரோ - கோல் இந்தியா கூட்டு ஆய்வு

சுரங்கப் பாதுகாப்பு: இஸ்‌ரோ - கோல் இந்தியா கூட்டு ஆய்வு

1 mins read
தன்பாத் சுரங்கத் தீ தொடர்பான ஆய்வில் ‘ஏஐ’ தொழில்நுட்பம்
41c18a1c-8545-40b7-8f11-b7824b2d047d
இந்தியா முழுவதுமுள்ள நிலக்கரிச் சுரங்கங்களில் ‘ஏஐ’ தொழில்நுட்பம் மூலம் தொலைவிலிருந்தே கண்காணித்து, தீ பரவும் தன்மையை மதிப்பிட புதிய கட்டமைப்பு உதவும். குறிப்பாக, ஜாரியா நிலத்தடித் தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகள் இதனால் பயனடையும். - கோப்புப் படம்: புளூம்பெர்க்

ராஞ்சி: இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜாரியா நிலக்கரிச் சுரங்கத்தில் பல்லாண்டு காலமாக எரிந்துவரும் நிலத்தடித் தீ தொடர்பான கண்காணிப்பை மேம்படுத்தும் நடவடிக்கையில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ), இயந்திரக் கற்றல் (எம்எல்) போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.

மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் மூலம் அந்தத் தீயைக் கண்காணிக்கும் பொருட்டு ‘கோல் இந்தியா லிமிடெட்’ நிறுவனம், இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பான ‘இஸ்‌ரோ’வின் தேசியத் தொலை உணர் நிலையத்துடன் இணைந்து புதிய கண்காணிப்புக் கட்டமைப்பை உருவாக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்தியா முழுவதுமுள்ள நிலக்கரிச் சுரங்கங்களில் ‘ஏஐ’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தொலைவிலிருந்தே கண்காணித்து, தீ பரவும் தன்மையை மதிப்பிட இந்தக் கட்டமைப்பு உதவும்.

குறிப்பாக, ஜாரியா நிலத்தடித் தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகள் இதனால் பயனடையும்.

‘கோல் இந்தியா லிமிடெட்’ நிறுவனம் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. இந்த முயற்சியின் மூலம், சுரங்கக் கண்காணிப்பின் துல்லியம், செயல்திறன், வெளிப்படைத்தன்மையை மேம்படுத்த முடியும் என்று அது கூறியது.

குறிப்புச் சொற்கள்
இந்தியாநிலக்கரிசுரங்கம்இஸ்‌ரோஒப்பந்தம்அறிவிப்பு