புதுடெல்லி: வாகன உற்பத்தித் துறைக்குத் தேவையான அரிய வகை கனிமங்களை இந்தியா முழுவதும் 1,200க்கும் மேற்பட்ட இடங்களில் கண்டறிய விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று இந்தியப் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
மின்சார வாகனங்கள், கைப்பேசிகள், கணினிகள், ராணுவத் தளவாடங்கள் போன்ற நவீன தொழில்நுட்ப சாதனங்களுக்கு அரிய வகை கனிமங்கள் இன்றியமையாதவை.
மாருதி சுசுகியின் முதல் மின்சார கார், ‘இ-விடாரா’வை (eVitara) அறிமுகப்படுத்தி மோடி பேசினார். குஜராத்தில் உள்ள மாருதி ஆலையில் தயாரிக்கப்படவுள்ள இந்த கார், 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.
“ஜப்பானிய நிறுவனமான சுசுகி, இந்தியாவில் கார்களைத் தயாரித்து ஜப்பானுக்கே ஏற்றுமதி செய்கிறது. இது, இந்தியாவின் ஜனநாயகம், மக்கள்தொகை பலம், திறன்மிக்க பணியாளர்கள்மீது உலக நிறுவனங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்குச் சான்றாகும்,” என்று மோடி கூறினார்.
இந்தியாவில் சுசுகி மோட்டார் நிறுவனத்தின் ரூ.70,000 கோடியை (8 பில்லியன் யுஎஸ் டாலர்) முதலீடு செய்கிறது. இது உலகளாவிய வாகன விநியோகத்தை அதிகரிக்கும்.
அரிய வகை கனிமங்களின் பற்றாக்குறை இந்திய உற்பத்தித் துறைக்கு ஒரு பெரிய சவாலாக உள்ளது. உலகளவில் இந்தக் கனிமங்களின் விநியோகத்தில் சீனா முக்கிய ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், அவற்றின் ஏற்றுமதிக்கு அது விதித்துள்ள கட்டுப்பாடுகள் இந்தியாவுக்குச் சவாலாகி உள்ளன.
இந்த அரிய வகை கனிமங்கள் திட்டம், இந்தியாவின் வாகனத் துறையில் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கவிருக்கின்றன. உலகளாவிய சந்தை நெருக்கடிகளுக்கு மத்தியில், உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்துவதன் மூலம் இந்தியா தன்னிறைவை அடைவது மட்டுமின்றி, உலகளாவிய விநியோகச் சங்கிலியில் தனது நிலையை உறுதிப்படுத்தவும் இது உதவும்.