புதுடெல்லி: உலக அளவில் பொம்மைப் பொருள்களின் விற்பனையில் எதிர்கொள்ளும் போட்டிகளைச் சமாளிக்க வேண்டுமெனில், இந்திய நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளின் தரத்தை மேம்படுத்துவதிலும் நவீன உற்பத்தி முறைகளிலும் கவனம் செலுத்த வேண்டுமென இந்திய வர்த்தகத் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனுடனும் ஐரோப்பிய ஒன்றியத்துடனும் இந்தியா செய்துகொண்டுள்ள தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்களை இந்தியப் பொம்மைத் தயாரிப்பு நிறுவனங்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென புதுடெல்லியில் நடைபெறும் 17வது அனைத்துலகப் பொம்மைத் தயாரிப்பு நிறுவனங்களின் கண்காட்சியில் பேசியபோது அவர் குறிப்பிட்டார்.
அடுத்த ஆறு ஆண்டுகளில் உலகச் சந்தையில் ஐந்து விழுக்காடு பங்களிப்பை வழங்கும் வகையில், இந்திய நிறுவனங்கள் இலக்கு நிர்ணயித்துச் செயல்பட வேண்டுமென அமைச்சர் பியூஷ் கோயல் கேட்டுக்கொண்டார்.
இது கடினமான இலக்கல்ல என்றும் அவர் கூறினார்.
“இந்தியாவின் ஒன்பது தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்களின் வரம்புக்குள் 38 நாடுகள் வருகின்றன. இந்தியாவில் 21,000 பொம்மைத் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. ஆனால், பொம்மை தயாரிப்புப் பக்கத்தில் 1,200 நிறுவனங்கள் மட்டுமே உறுப்பினர்களாக உள்ளனர். எனவே அனைத்து நிறுவனங்களும் ஒரே கூரையின்கீழ் செயல்பட வேண்டும்,” என்றார் அமைச்சர் பியூஷ் கோயல்.
கடந்த 2024ஆம் ஆண்டில் இந்தியாவின் பொம்மை ஏற்றுமதி மதிப்பு சுமார் ரூ.3,230 கோடியாக இருந்தது. வரும் ஆண்டுகளில் பொம்மை ஏற்றுமதியைப் பத்து மடங்காக இந்திய நிறுவனங்கள் அதிகரிக்க வேண்டும்.
இந்தியப் பொம்மைத் தயாரிப்புச் சங்கத் தலைவர் மனு குப்தா பேசுகையில், இந்தியா செய்துள்ள வர்த்தக ஒப்பந்தங்கள், பொம்மை ஏற்றுமதியை அதிகரிக்கவும் உள்நாட்டில் பொம்மைத் தயாரிப்பை அதிகரிக்கவும் உதவும் என்றார்.


