ஐநாவில் பாகிஸ்தானைச் சாடிய அமைச்சர் ஜெய்சங்கர்

ஐநாவில் பாகிஸ்தானைச் சாடிய அமைச்சர் ஜெய்சங்கர்

படம்: பிடிஐ

27 Sep 2026 - 6:14 pm

2 mins read

நியூயார்க்: பாகிஸ்தான் தொடர் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் நாடு என ஐநா பொதுச் சபையில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார்.

பயங்கரவாதத்திற்கு எதிராகத் தற்காத்துக்கொள்ளும் உரிமையை இந்தியா எப்போதும் பயன்படுத்தும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐநா பொதுசபையின் 81வது கூட்டத்தில் உரையாற்றிய அவர், ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்காக இந்தியாவை விமர்சித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆற்றிய உரைக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்தார்.

“பயங்கரவாதத்தைப் பயன்படுத்தி வரும் ஒரு நாடு, உண்மைகளைத் திரித்துக் கூறியுள்ளது. ஆனால், பயங்கரவாதமும் நட்புறவும் ஒருபோதும் ஒன்றாகப் பயணிக்க முடியாது,” என்றார் அவர்.

ஐநா கூட்டத்தின் ஒரு பகுதியாக, துருக்கி, ஈரான், ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை திரு ஜெய்சங்கர் நேரில் சந்தித்து பேச்சு நடத்தினார்.

வளைகுடா பகுதியில் தொடர்ந்து நடைபெறும் மோதல்கள், ஏற்கெனவே மோசமாக உள்ள சூழலை மேலும் சிக்கலாக்கியுள்ளது. அனைத்துத் தரப்பினரும் கட்டுப்பாட்டுடன் செயல்பட்டு, பதற்றத்தை தணிக்க வேண்டும் என்று திரு ஜெய்சங்கர் அழைப்பு விடுத்தார்.

வளைகுடா, செங்கடல், கருங்கடல் உள்ளிட்ட பகுதிகளில் வர்த்தகக் கப்பல்கள், மாலுமிகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இத்தகைய தாக்குதல்களில் இந்திய மாலுமிகளும் உயிரிழந்துள்ளனர் என்ற அவர், பொதுமக்களின் பாதுகாப்பையும் எரிசக்தி, வணிகப் பொருள்களின் தடையற்ற போக்குவரத்தையும் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இத்தகைய தாக்குதல்களைத் தடுக்க, உலக நாடுகளின் ஆதரவைத் திரட்ட, லைபீரியா மற்றும் 23 நாடுகளுடன் இணைந்து புதிய முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது.

மேற்காசிய பகுதியில் நிலவும் போர் மற்றும் உக்ரேன் - ரஷ்யா இடையிலான போர் கவலையளிக்கின்றன. முடிவில்லாமல் தொடரும் போர்கள் முடிவுக்கு வர வேண்டும். பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத நாடு. உண்மைகளைத் திரித்து பேசுகிறது. பயங்கரவாதத்துக்கு எதிரான சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறையில் எந்தவித தளர்வும் இருக்கக்கூடாது,” என்று அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்