புதுடெல்லி: கடந்த 2015ஆம் ஆண்டு அரசு பேருந்துகளில் பெண்களின் பாதுகாப்புக்காக பயணிகளின் பாதுகாவலர் (பஸ் மார்ஷல்) என்ற பணியிடங்களை அரவிந்த் கெஜ்ரிவால் அரசு உருவாக்கியது.
இதன்படி ஊர்க்காவல் படையினர் உள்ளிட்ட தன்னார்வலர்கள் 10 ஆயிரம் பேர் இப்பணியில் சேர்க்கப்பட்டனர். இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்புகள் அதிகரிக்கவே கடந்த ஆண்டு இத்திட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், பயணிகள் பாதுகாவலர்களை மீண்டும் பணியமர்த்தும் விதமாக கடந்த மாதம் டெல்லி சட்டசபையில் ஆம்ஆத்மி கட்சி சார்பில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக அம்மாநில ஆளுநரை நேரில் சந்தித்து முறையிடுவதற்காக புதுடெல்லி அமைச்சர் சவுரப் பரத்வாஜ் தலைமையில் அணி திரண்டது. ஆனால் ஆளுநரைச் சந்திக்க விடாமல் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
இதற்கிடையே, புதுடெல்லி சட்டசபை எதிர்க்கட்சி தலைவரான பா.ஜ.க. எம்.எல்.ஏ. விஜேந்தர் குப்தாவை ஆம் ஆத்மி கட்சியினர் சந்தித்து, தங்களோடு சேர்ந்துஆளுநரைச் சந்திக்க வருமாறு அழைத்தனர். அப்போது, ஒரு கட்டத்தில் அமைச்சர் சவுரப் பரத்வாஜ், பா.ஜ.க. எம்.எல்.ஏ.வின் காலில் விழுந்து கெஞ்சினார்.
இந்தக் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.