புதுடெல்லி: இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தகப் பங்குதாரராக அமெரிக்கா உள்ளது. 2024-25ஆம் ஆண்டுகளுக்கான இருதரப்பு வர்த்தகம் 131.84 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.
இதில் ஏற்றுமதியின் மதிப்பு 86.5 பில்லியன் அமெரிக்க டாலர். இந்நிலையில், இந்தியா மீது அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் 25 விழுக்காடு வரியும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக 25 விழுக்காடு அபராத வரியும் விதித்தார்.
இரு நாடுகள் இடையே கடந்த பிப்ரவரி மாதம் முதல் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதிகள் குழு பிரண்டன் லின்ச் தலைமையில் இந்தியா வந்தது.
அக்குழு செப்டம்பர் 16ஆம் தேதி, இந்திய வர்த்தகத் துறை சிறப்புச் செயலாளர் ராஜேஷ் அகர்வால் தலைமையிலான இந்திய குழுவினருடன் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்தப் பேச்சுவார்த்தை சரியான திசையில் செல்வதாக இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். இரு நாடுகளும் பரஸ்பரம் பயன் அடையும் வகையில் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் செய்ய இணக்கம் தெரிவித்துள்ளன. இதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்தவும் முடிவு எடுக்கப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்காவுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தை தொடர அமைச்சர் பியூஷ் கோயல் தனது குழுவினருடன் திங்கட்கிழமை (செப்டம்பர் 22) அமெரிக்கா செல்கிறார். இதில் ராஜேஷ் அகர்வால் உட்பட இதர அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர். இவர்கள் அமெரிக்க குழுவினருடன் நியூயார்க்கில் பேச்சுவார்த்தை நடத்துவர்.