புதுடெல்லி: இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் வந்தே பாரத் ரயில்கள் அனைத்திலும் உட்காரும் வசதி மட்டும்தான் உள்ளன. படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் கொண்டுவரப்படும் என இந்திய ரயில்வே அமைச்சு அறிவித்திருந்தது.
ஆனால், தற்போது அதில் சில தாமதங்கள் ஏற்பட்டுள்ளன. இதற்குப் படுக்கை வசதிகள் கொண்ட ரயில்கள் வடிவமைப்புக்கான அனுமதியில் ஏற்பட்ட சிக்கல்கள்தான் காரணம் என இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இதை இந்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இதுகுறித்து வியாழக்கிழமை (நவம்பர் 28) நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “வந்தே பாரத் படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளைத் தயாரிக்கும் பணி ‘டிரான்ஸ்மாஷ்ஹோல்டிங்’ (Transmashholding) எனும் ரஷ்ய நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்திற்கும் இந்திய ரயில்வே துறைக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை,” எனக் கூறினார்.
உணவு அருந்தும் இடம், கழிவறை உட்பட வந்தே பாரத் படுக்கை வசதி கொண்ட ரயிலின் வடிவமைப்பில் சில மாற்றங்களை மேற்கொள்ளும்படி ரஷ்ய நிறுவனத்திடம் இந்திய ரயில்வே அமைச்சு கேட்டுக்கொண்டதாக சில இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
மேலும், பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்கள் ரயிலின் ஒட்டுமொத்த வடிவமைப்பை மாற்றியிருக்கலாம், மாற்றியமைக்கப்பட்ட வடிவமைப்பை இறுதிசெய்ய ரயில்வே அமைச்சு தாமதித்திருக்கலாம் போன்ற தகவல்கள் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தன.
இந்தத் தகவல்கள் அனைத்தையும் மறுத்த ரயில்வே அமைச்சர், “பெரிய ரயில் பெட்டிகளைத் தயாரிப்பதில் அந்நிறுவனத்திற்கு குறைந்த அனுபவமே உள்ளது. இதுதான் தற்போது முக்கிய பிரச்சினையாக உள்ளது,” என்றார்.
ரஷ்யாவில் குறைவான பெட்டிகள் கொண்ட ரயில்களைத் தயாரிப்பதில் அனுபவம் பெற்றுள்ள அந்நிறுவனம், இந்தியாவில் 16, 20 அல்லது 24 பெட்டிகள் கொண்ட ரயில் பெட்டிகளைத் தயாரிப்பதில் சற்று சிரமங்களை எதிர்நோக்குகிறது என இந்திய ரயில்வே அமைச்சு தெரிவித்ததாக ‘பிடிஐ’ செய்தி நிறுவனம் கூறியது.
தொடர்புடைய செய்திகள்
மேலும், இந்தியாவின் தேவைகள் அனைத்தும் அந்நிறுவனத்திடம் எடுத்துரைக்கப்பட்டு இருப்பதாகவும் அதற்கு ஏற்றவாறு தயாரிப்புக் குழுவை அது அதிகரிக்க வேண்டுமெனவும் ரயில்வே அமைச்சு சொன்னது.