அமைச்சரின் இஸ்லாமிய மனைவியைச் சம்பந்தப்படுத்தி விமர்சனம்: கர்நாடக பாஜக எம்எல்ஏவுக்குக் கைதாணை

2 mins read
515a70bc-944c-41b1-9ed6-2e54ac677019
பாஜக எம்எல்ஏ பசன கௌடா பாட்டீல் யத்னல். - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

பெங்களூரு: காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சா் தினேஷ் குண்டுராவின் மனைவி குறித்து சா்ச்சைக் கருத்து கூறியது தொடா்பான வழக்கு விசாரணைக்கு வராத பாஜக எம்எல்ஏவைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக மாநில காங்கிரஸ் அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராக இருப்பவர் தினேஷ் குண்டுராவ்.

அண்மையில், அவரது குடும்பம் குறித்து பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏ பசனகௌடா பாட்டீல் யத்னல் விமர்சித்து இருந்தார்.

“தினேஷ் குண்டுராவின் குடும்பத்தில் பாதி பாகிஸ்தான் உள்ளது,” என்று அவர் குறிப்பிட்டிருந்தாா்.

அமைச்சா் தினேஷ் குண்டுராவின் மனைவி தபஸ்ஸம் ராவ் இஸ்லாமிய சமுதாயத்தைச் சோ்ந்தவா் என்பதைக் குறிக்கும் வகையில் அவர் அப்படித் தெரிவித்து இருந்தார்.

அந்த விமர்சனத்திற்குக் கடுமையான ஆட்சேபம் தெரிவித்த தபஸ்ஸம் ராவ், பாஜகவின் சமூக வலைத்தளப் பிரிவுக்கு எதிராகவும் பாஜக எம்எல்ஏ பசனகௌடா பாட்டீல் யத்னலுக்கு எதிராகவும் கா்நாடக மாநில மகளிர் ஆணையத்தில் புகாா் அளித்திருந்தாா்.

தாம் அரசியலில் ஈடுபடாதபோது, அரசியல் காரணங்களுக்காக தம்மை விமா்சித்தது சரியல்ல என்று அந்தப் புகாரில் அவர் குறிப்பிட்டிருந்தாா்.

“பெண்களை மதிப்பது முக்கியம். பிற மதங்கள் மீது நன்மதிப்பு இல்லாவிட்டாலும், பெண்கள் குறித்து தரக்குறைவாக விமா்சிப்பது சரியல்ல.

தொடர்புடைய செய்திகள்

“அரசியல் முரண்பாடுகளுக்காக, குடும்பத்தினரை பொதுவெளியில் விமா்சிப்பது ஏற்க முடியாது,” என்பது தபஸ்ஸம் ராவின் கருத்து.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக மகளிர் சிறப்பு நீதிமன்றத்திற்கு வருமாறு பசனகௌடா பாட்டீல் யத்னலுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், அவர் விசாரணைக்குச் செல்லவில்லை.

அதனால், அவரைக் கைதுசெய்து உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம், விசாரணையை அக்டோபர் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. அதனைத் தொடர்ந்து பிணையில் வெளிவர இயலாத வகையிலான கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்