பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில், இரண்டு தலைகள், நான்கு கண்களுடன் கன்றுக்குட்டி ஒன்று பிறந்துள்ளது.
இதைக் காண பொதுமக்கள் பெரும் கூட்டமாக கூடுகின்றனர்.
கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் உள்ளது அவனி கிராமம். இங்கு எல்லப்பா என்ற விவசாயி வசித்து வருகிறார்.
இந்நிலையில், அவருக்குச் சொந்தமான பசுமாடு ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று (ஏப்ரல் 13) ஒரு கன்றுக்குட்டியை ஈன்றது.
இதனால் மகிழ்ச்சி அடைந்த எல்லப்பா, கன்றுக்குட்டியை உற்றுக் கவனித்தபோது, அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தார்.
அந்தக் கன்றுக்குட்டி இரண்டு தலைகள், நான்கு கண்களுடன் காணப்பட்டது.
உடனடியாக உள்ளூர் கால்நடை மருத்துவரை அவர் அழைக்க, நேரில் வந்து கன்றுக்குட்டியைப் பரிசோதித்த மருத்துவர், அதன் உடல்நிலை சீராக இருப்பதாகக் கூறியுள்ளார்.
இந்த அதிசய கன்றுக்குட்டி குறித்து வேகமாக தகவல் பரவியதையடுத்து, அதைக் காண பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக எல்லப்பா வீட்டுக்கு படையெடுத்து வருகின்றனர்.