கொச்சி: கேரள மாநிலத்தின் கொச்சி துறைமுகத்துக்கு வந்த வெளிநாட்டு எண்ணெய்க் கப்பலிலிருந்து, வெடிக்காத ஏவுகணை ஒன்றை இந்தியக் கடற்படை வீரர்கள் பாதுகாப்பாக அகற்றியுள்ளனர்.
மார்ஷல் தீவுகள் நாட்டைச் சேர்ந்த ‘எம்டி ஒலிம்பிக்லைஃப்’ என்ற அந்த எண்ணெய்க் கப்பல், சென்ற மாதம் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளிலிருந்து கச்சா எண்ணெயை ஏற்றிக்கொண்டு கொச்சிக்குப் புறப்பட்டது.
அமெரிக்கா, ஈரான் போர் காரணமாக மே 26ஆம் தேதி அந்தக் கப்பல் ஓமான் வளைகுடாப் பகுதியைக் கடக்கும்போது ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளானது.
தாக்குதலை அடுத்து, கப்பலில் லேசான சேதம் ஏற்பட்டது. மேலும், ஓர் ஏவுகணை வெடிக்காமல் கப்பலின் எண்ணெய்ச் சேமிப்புப் பகுதியில் கிடந்த நிலையில் அந்த எண்ணெய்க் கப்பல் சில நாள்களுக்கு முன்பு கொச்சி கடல் பகுதிக்கு வந்தது.
இதைத் தொடர்ந்து கொச்சி தெற்குக் கடற்படைப் பிரிவைச் சேர்ந்த வெடிகுண்டு வல்லுநர்கள் மிகுந்த கவனத்துடன் வெடிக்காத அந்த ஏவுகணையைப் பகுதி பகுதியாகப் பிரித்து, பாதுகாப்பாக அகற்றினர்.
அந்தக் கப்பலில் இந்தியர்கள் யாரும் பணியாற்றவில்லை. எனினும் மனிதநேய அடிப்படையில் இந்தியக் கடற்படை இப்பணியை மேற்கொண்டது. ‘எம்டி ஒலிம்பிக் லைஃப்’ கப்பலில் இருந்த கடலோடிகள் இந்தியக் கடற்படைக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

