சிந்தூர் நடவடிக்கையில் எமனாகச் செயல்பட்ட ஏவுகணைகள்

2 mins read
891bb946-2736-4898-9116-01d23fe86d03
சிந்தூர் நடவடிக்கையில் ‘ஸ்கால்ப்’, ‘ஹாமர்’ ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன. - படம்: இணையம்

புதுடெல்லி: இந்தியாவின் ‘சிந்தூர் நடவடிக்கை’ மூலம் பல நூறு கிலோமீட்டர் சென்று, இலக்குகளைத் தாக்கி அழிக்கும் வல்லமை இந்தியாவுக்கு இருக்கிறது என்பது உலக நாடுகளுக்குத் தெரியவந்துள்ளது.

2019ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்குள் போர் விமானங்களில் சென்றுதான் துல்லியத் தாக்குதலை இந்தியா நடத்தியது. இம்முறை தனது எல்லையில் இருந்துகொண்டே துல்லியத் தாக்குதலை இந்திய ராணுவம் நடத்தியுள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்தது ‘ஸ்கால்ப்’ ஏவுகணைதான்.

பிரான்ஸ் - பிரிட்டன் கூட்டுத் தயாரிப்பில் உருவாக்கப்பட்ட இது, கிட்டத்தட்ட ஒன்றரை டன் எடை கொண்டது. எதிரி நாட்டு ஏவுகணைகளைக் கண்டறியும் உணர்கருவியையே இது ஏமாற்றும் திறன் கொண்டதால், இதனை ‘நிழல் புயல்’ ஏவுகணை எனச் செல்லமாக ராணுவத்தில் அழைப்பது உண்டு. .

வான்வெளி பாதுகாப்பில் சீனாவின் துணையுடன் சிறந்து விளங்கும் பாகிஸ்தானின் கண்ணிலேயே மண்ணைத் தூவி, இது அதிர வைத்துள்ளது.

5.1 மீட்டர் நீளம் கொண்ட இந்த ஏவுகணைகள், 600 கி.மீ. தூரத்தில் உள்ள இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும். நொடிக்கு 1.163 கி.மீ. வேகத்தில் செல்லக் கூடியது. ரஃபேல் போர் விமானத்தில் இந்த ‘ஸ்கால்ப்’ ஏவுகணைகளைப் பொருத்தி, இந்திய எல்லையில் நிறுத்தி வைத்துவிட்டு, இந்தத் துல்லிய தாக்குதலை இந்திய ராணுவம் நடத்தியுள்ளது.

இந்த ஏவுகணையின் தலைப்பகுதியில் 450 கிலோ எடைகொண்ட குண்டு பொருத்தப்பட்டுள்ளதால், இரும்புக் கோட்டையைக் கூட துளை போட்டுச் சென்று இலக்குகளை மண்ணோடு மண்ணாக அழித்துவிடும் திறன் கொண்டது.

இந்த ‘ஸ்கால்ப்’ ஏவுகணையைத் தவிர, ‘ஹாமர்’ ஏவுகணைகளும், ‘நாகாஸ்திரா-1’ எனப்படும் ‘தற்கொலை’ ஏவுகணைகளும் இந்தத் துல்லிய தாக்குதலைக் கச்சிதமாகச் செய்து முடித்துள்ளன. தற்கொலை ஏவுகணைகள், மற்ற ஏவுகணையைப் போல இலக்கை நோக்கிப் பாயாமல், காற்றில் அங்குமிங்குமாக மிதந்தபடி சென்று இலக்கைத் தாக்கும். இதனால் எதிரி நாட்டு ஏவுகணைகளைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகளால் கூட இதனை நெருங்க முடியாது.

குறிப்புச் சொற்கள்