புதுடெல்லி: ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ (சிஜேபி) என்ற இணையக்குழுவை, தற்போது ‘மக்கி ஜனதா கட்சி’ (எம்ஜேபி) என்ற புதிய நையாண்டி இயக்கம் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ‘மக்கி’ என்றால் ஈக்கள் என்று அர்த்தம்.
இளையர்களின், இளையர்களால், இளையர்களுக்காக என்ற முழக்கத்துடன் இயங்கும் சுயாதீன அமைப்பாகச் செயல்படுவதாக இந்த இயக்கத்தினர் கூறுகின்றனர். இன்ஸ்டகிராம் போன்ற தளங்களில் தற்போது முழு வீச்சுடன் இயங்கத் தொடங்கியுள்ளனர்.
நையாண்டி வழியில் மக்களின் போராட்ட உரிமையையும் பொருளியல் முன்னேற்றம், வேலைவாய்ப்பு போன்ற அடிப்படைத் தேவைகளையும் வலியுறுத்தும் இயக்கமாகச் செயல்படப்போவதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். தங்கள் இயக்கம் எந்த அரசியல் கட்சிக்கும் எதிரானது அல்ல என்றும் எந்தக் கட்சியுடனும் இணைந்தது அல்ல என்றும் கூறியுள்ளனர்.
கடந்த அக்டோபர் 9ஆம் தேதி, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு கரப்பான்பூச்சி மக்கள் இயக்கம் நடத்திய போராட்டம் தொடர்பான வழக்கை விசாரித்தபோது, பாதுகாப்பு நடவடிக்கைகள் அளவுக்கு மீறக் கூடாது என்றும் ஈயைக் கொல்ல சுத்தியலைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் கூறியது. இந்தக் கருத்தே மக்கி ஜனதா இயக்கத்தின் பெயருக்கும் நையாண்டிக்கும் அடிப்படையானது என்றனர் நிர்வாகிகள்.
