நடுவானில் தீப்பிடித்த கைப்பேசி மின்னூட்டி: அவசரமாகத் தரையிறங்கிய விமானம்

நடுவானில் தீப்பிடித்த கைப்பேசி மின்னூட்டி: அவசரமாகத் தரையிறங்கிய விமானம்

1 of 2
படம்: என்டிடிவி
கோப்புப் படம்: தினமணி

12 Oct 2026 - 5:25 pm

1 mins read

புதுடெல்லி: டெல்லியில் இருந்து சென்னை வந்துகொண்டிருந்த இண்டிகோ பயணிகள் விமானத்தில், நடுவானில் திடீரெனக் கைப்பேசி மின்னூட்டி (பவர் பேங்க்) தீப்பிடித்ததால் பயணிகள் பீதியடைந்தனர்.

வேகமாகச் செயல்பட்ட விமான ஊழியர்கள் தீயை உடனடியாகக் கட்டுப்படுத்தியதை அடுத்து, அந்த விமானம் ஹைதராபாத் அனைத்துலக விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

டெல்லியில் இருந்து சென்னை நோக்கி ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 11) புறப்பட்ட இண்டிகோ விமானம், நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, பயணி ஒருவரின் கைப்பேசி மின்னூட்டி வைக்கப்பட்டிருந்த பையில் இருந்து புகை வருவதை விமானப் பணிப்பெண்கள் கவனித்தனர்.

உடனடியாகச் செயல்பட்ட விமான ஊழியர்கள், தீயணைப்புச் சாதனங்களைப் பயன்படுத்தி தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

எனினும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானி, அந்த விமானத்தை ஹைதராபாத் விமான நிலையத்திற்குத் திருப்பி, அங்கு பாதுகாப்பாகத் தரையிறக்கினார்.

இந்தச் சம்பவத்தில் பயணிகள், ஊழியர்கள் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என விமான நிறுவன நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஹைதராபாத்தில் இறக்கிவிடப்பட்ட பயணிகளுக்கு உடனடியாக மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு, அவர்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விமானப் பயணங்களின்போது லித்தியம்-அயன் பேட்டரிகள், கைப்பேசி மின்னூட்டிகளில் தீப்பிடிக்கும் அபாயம் உள்ளதால், அவற்றைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்வது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு மீண்டும் ஆய்வு செய்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்
இண்டிகோவிமானம்கைப்பேசிடெல்லிசென்னை