ஓடும் ரயில்களில் கைப்பேசி திருட்டு

ஓடும் ரயில்களில் கைப்பேசி திருட்டு

1 mins read
c12bbec6-397d-4131-95a8-cfdfa7da9c22
கைப்பேசி திருட்டு குறித்து காவல்துறைக்கு இரு புகார்கள் வந்தன. - கோப்புப் படம்: ஊடகம்
Google News Preferred Icon

விழுப்புரம்: விழுப்புரத்தில் ஓடும் ரயிலில் கைப்பேசிகளைத் திருடிய வாலிபரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை, துரைப்பாக்கத்தைச் சேர்ந்த சசிகுமார் மகள் கோமதி, 36. இவர், கடந்த 29ஆம் தேதி இரவு தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை செல்ல உழவர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது மின்னூட்டம் செய்வதற்காகப் பொருத்தப்பட்டிருந்த அவரது கைப்பேசி காணாமல் போனது.

அதேபோல், கள்ளக்குறிச்சி மாவட்டம், திப்பிராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை, 30, கடந்த சனிக்கிழமை காலை விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் பயணிகள் ரயிலில் பயணம் செய்தார்.

அப்போது, அவரது கைப்பேசி களவுபோனது. இருவரும் விழுப்புரம் ரயில்வே காவல்துறையிடம் புகார் அளித்தனர். காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.

இதையடுத்து, கைப்பேசி திருட்டில் ஈடுபட்ட சையத் அலி மகன் அர்பான், 24, என்பவரைக் காவல்துறை கைது செய்தது. இவர், கேரளா மாநிலம் இஞ்சிவிளை பகுதியைச் சேர்ந்தவர். அவர் திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம் கிராமத்தில் வசித்து, கைப்பேசி திருட்டில் ஈடுபட்டு வந்தார் என காவல்துறை தகவல் தெரிவிக்கிறது.

அவர்மீது தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரிடம் இருந்து இரு கைப்பேசிகளைப் பறிமுதல் செய்த காவல்துறை தொடர்ந்து விசாரித்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்