தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தேர்தலில் கைப்பேசிவழி வாக்களிப்பு; பீகார் சாதனை

1 mins read
3b65b60e-64fd-46d8-a1dd-fddc7b4fd448
கைப்பேசி வழியாக வாக்களித்த முதல் இந்தியர் எனும் பெருமைக்குரியவரான திருவாட்டி பீபா குமாரி. - படம்: எக்ஸ்/பீகார் தேர்தல் ஆணையம்

பாட்னா: தேர்தலில் கைப்பேசிவழி வாக்களிப்பை அறிமுகப்படுத்திய முதல் இந்திய மாநிலம் என்னும் பெருமையைப் பெற்றுள்ளது பீகார் மாநிலம்.

சனிக்கிழமை (ஜூன் 28) நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அம்மாநிலத்தில் இந்நடைமுறை கையாளப்பட்டது.

வாக்குரிமை பெற்றோரில் 70.2 விழுக்காட்டினர் கைப்பேசிவழி வாக்களிப்பைத் தெரிவுசெய்ததாக மாநிலத் தேர்தல் ஆணையர் தீபக் பிரசாத் தெரிவித்துள்ளார்.

“பீகார் இன்று வரலாறு படைத்துள்ளது,” என்று பீகார் தேர்தல் ஆணையம் தனது எக்ஸ் ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

“கிழக்குச் சம்பாரன் மாவட்டம், பக்ரிதயாள் பகுதியைச் சேர்ந்த பீபா குமாரி கைப்பேசி வழியாக வாக்களித்த முதல் இந்தியர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார்,” என்றும் அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆறு நகரப் பஞ்சாயத்துகளுக்கும் பல நகராட்சி இடைத்தேர்தல்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 538 வேட்பாளர்கள் களத்திலுள்ள நிலையில், 489 வாக்குச்சாவடிகளில் வாக்களிப்பு இடம்பெற்றது. மொத்தம் 62.41% வாக்குகள் பதிவாயின.

முதியவர்கள், உடற்குறையுள்ளோர், கர்ப்பிணிகள், குடியேறிகள் போன்ற, வாக்குச்சாவடிகளுக்கு வருவதில் சிரமங்களை எதிர்நோக்கியவர்களுக்காக இந்த மின்னணு வாக்குப்பதிவு முறை வடிவமைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

முன்கூட்டியே பதிவுசெய்தவர்கள் மட்டுமே கைப்பேசி வழியாக வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

பாட்னா, பக்சர், போஜ்பூர், கைமூர், நாளந்தா, கத்திஹார், அரரியா, சகர்சா, கிழக்குச் சம்பாரன் ஆகிய மாவட்டங்களில் வாக்குப்பதிவு இடம்பெற்றது.

பதிவான வாக்குகள் ஜூன் 30ஆம் தேதி திங்கட்கிழமை எண்ணப்படும்.

குறிப்புச் சொற்கள்