திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜையின் முதல் நாள் திங்கட்கிழமை (நவம்பர் 17, 2025) அதிகாலை 3 மணிக்குச் சன்னிதானம் நடை திறக்கப்பட்டது. டிசம்பர் 27 வரை கோவில் நடை திறந்திருக்கும். சபரிமலை ஐயப்பன் கோவில் கேரளாவின் பத்தனாம் திட்டா மாவட்டத்தில் உள்ளது.
ஐயப்பப் பக்தர்கள் விரதத்தைத் தொடங்கியுள்ளனர். இந்த மண்டல காலத்தில் பக்தர்கள் 41 நாள்கள் விரதம் இருந்து ஐயப்பனைத் தரிசிப்பர்.
இந்நிலையில், பக்தர்களின் பாதுகாப்புக் கருதி அந்த மாநிலத்தின் சுகாதாரத்துறை சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
அதாவது, சபரிமலை சன்னிதானம் பகுதியில் புகைப்படக்கருவி, கைத்தொலைபேசி பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், கேரளாவில் அமீபா என்னும் நோயால் பாதிக்காத வகையில் கேரள மாநில சுகாதாரத்துறை சில வழிகாட்டி விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
தேங்கிய நீரில் வாழும் அமீபாவால் மூளைக் காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளதால், ஐயப்ப பக்தர்கள் நீர்நிலைகளில் குளிக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கேரளாவில் மூளை தின்னும் அமீபா நோயால் பாதிக்கப்பட்டு இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 90க்கும் மேற்பட்டோர் அங்கு இந்த நோயால் பாதிக்கப்பட்டனர்.
பம்பையில் நீராடும் பக்தர்கள் மூக்கை இரு விரல்களால் அடைத்தபடி நீராட வேண்டும் என்று கேரள சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

