காந்திநகர்: குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 8) இரவு 9.15 மணியளவில் 3.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பின்னர், 11.26 மணியளவில் மீண்டும் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதையொட்டி, கட்ச் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிலஅதிர்வுகள் உணரப்பட்டன. அதன் காரணமாக வீடுகள் மற்றும் கட்டடங்களை விட்டு பொதுமக்கள் அச்சத்தில் வெளியேறினர். மீண்டும் நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தால் அப்பகுதி மக்கள் இரவு முழுதும் தங்கள் வீடுகளுக்குள் செல்லாமல் வெளியில் இரவைக் கழித்ததாகக் கூறப்படுகிறது.
பல இடங்களில் சாலைகளில் உள்ள மின்விளக்குக் கம்பங்கள் ஆட்டம் கண்டன.
பூமிக்கு அடியில் 20 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.3ஆகப் பதிவாகியுள்ளது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. அதனால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவிதத் தகவலும் வெளியாகவில்லை என்றும் அந்த மையம் தெரிவித்தது.
இருப்பினும், தேவை ஏற்படின் அவசரச் சேவை வழங்குவதற்கு அரசாங்கம் தயார் நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் இவ்வாண்டு ஜனவரி 1ஆம் தேதி 3.2 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதற்கு முந்தைய டிசம்பர் 7ஆம் தேதி 3.7 ரிக்டர் நிலநடுக்கமும் டிசம்பர் 23ஆம் தேதி 3.2 ரிக்டர் நிலநடுக்கமும், நவம்பரில் 4.2 ரிக்டர் நிலநடுக்கமும் ஏற்பட்டன. அச்சம்பவங்களில் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.