ஜெய்ப்பூர்: இந்திய எல்லைக்குள் போதைப்பொருள்கள் கடத்தி வரப்படுவதைத் தடுப்பதற்கு ஆளில்லா வானூர்திகள், பிற நவீனச் சாதனங்கள் கொண்ட அமைப்பு உருவாக்கப்படும் என இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையின் அதிகாரிகள் இடையே பேசிய அவர், போதைப்பொருள் ஒழிப்புக்கான நடவடிக்கைகளை இந்திய அரசு துரிதப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
நாட்டின் எல்லையில் விரிவான பாதுகாப்பை உறுதிசெய்ய எல்லைப் பாதுகாப்புப் படையினர், ஆயுதப் படைகள், உள்ளூர் நிர்வாகம், குடிமக்கள் என நான்கு நிலைகளிலும் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம் என்று திரு அமித்ஷா வலியுறுத்தினார்.
போதைப்பொருள் கடத்துவதைத் தடுப்பதற்கான ‘டிரோன்’ அமைப்பு, அடுத்த ஆறு மாதங்களுக்குள் நிறுவப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்தியாவுக்குள் போதைப்பொருள்கள் கடத்தப்படுவதைக் கண்காணித்துத் தடுக்கும் அதே வேளையில் உள்நாட்டிலும் தேசவிரோதச் செயல்களில் ஈடுபடுவோரைக் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் திரு அமித்ஷா.
போதைப்பொருள் கடத்தல், எல்லைப் பாதுகாப்பு தொடர்பாக பீகார், குஜராத், மேற்கு வங்கம், திரிபுரா உள்ளிட்ட மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், எல்லைப் பாதுகாப்புப் படை தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை ஈராயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்ததாகத் தெரிவித்தார்.

