புதுடெல்லி: இந்தியாவின் முதல் பிரதமரான மறைந்த ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான வியாழக்கிழமையன்று (நவம்பர் 14) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்டோர் அவரை நினைவுகூர்ந்தனர்.
திரு நேருவின் 135வது பிறந்தநாளையொட்டி, “திரு ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்,” என்று திரு மோடி எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் பதிவிட்டார்.
இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய நபராக விளங்கியது, சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவின் முதல் தலைவராகப் பொறுப்பு வகித்தது உட்பட திரு நேரு இந்தியாவுக்கு ஆற்றிய பங்கை நாடெங்கும் உள்ள அரசியல் தலைவர்கள் நினைவுகூர்ந்து கெளரவித்தனர்.
திரு நேரு, நவீன இந்தியாவை உருவாக்கியவர் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி மரியாதை செலுத்தினார்.
ஜனநாயகம், முன்னேற்றம், அஞ்சாமை, முன்னோக்குப் பார்வை, அனைவரையும் உள்ளடக்குவது ஆகிய திரு நேருவின் கொள்கைகளுக்கேற்ற பாதையில்தான் இந்தியா என்றும் பயணம் செய்யும் என்று எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
திரு நேரு, குழந்தைகளின் நலனுக்காகப் பாடுபட்டதை அங்கீகரிக்க அவரின் பிறந்தநாள், இந்தியாவில் சிறுவர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 1964ஆம் ஆண்டில் அவர் இறந்த பிறகு இந்திய அரசாங்கம் அவரின் பிறந்தநாள், சிறுவர் தினமாகக் கொண்டாடப்படும் என்று அறிவித்தது.
1889ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் தேதியன்று உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பிரயக்ராஜ் நகரில் பிறந்த திரு நேரு, இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்தவர்; 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியன்று அவர் அந்நாட்டின் முதல் பிரதமராகப் பொறுப்பேற்றார்.

