தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரூ. 35,000 கோடி மதிப்பிலான வேளாண் திட்டங்களை அறிவித்த மோடி

2 mins read
81c1a99f-88c0-43a6-9335-8ee1e9b3a13d
இந்திய வேளாண் ஆய்வு நிலையத்தில் கூடியிருந்த விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் பிரதமர் மோடி பேசினார். - படம்: பிடிஐ

புதுடெல்லி: பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ரூ. 35,000 கோடி மதிப்பிலான வேளாண் திட்டங்களை அறிவித்துள்ளார்.

வேளாண் துறையில் சிறப்பாகச் செயல்படாத 100 பகுதிகளைக் குறிவைத்து இரண்டு மாபெரும் வேளாண் உதவித் திட்டங்களைத் திரு மோடி சனிக்கிழமை (அக்டோபர் 11) வெளியிட்டார்.

இந்தியாவில் உணவுப் பொருள்களின் உற்பத்தியை அதிகரித்து இறக்குமதியைக் குறைக்க வேண்டும் என்றார் அவர்.

மேலும் விவசாயிகள் உள்நாட்டில் போதுமான அளவு உற்பத்தியைப் பூர்த்தி செய்துவிட்டு வெளிநாடுகளுக்கு உணவுப் பொருள்களை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றும் மோடி கேட்டுக்கொண்டார்.

இந்திய வேளாண் ஆய்வு நிலையத்தில் கூடியிருந்த விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் பிரதமர் மோடி பேசினார்.

“ஒரு பக்கம் நமக்குத் தேவையான அளவு உற்பத்தி செய்ய வேண்டும், மறுபக்கம் உலக நாடுகளுக்கு நமது பொருள்களை ஏற்றுமதி செய்ய வேண்டும். உலகச் சந்தையில் எந்தெந்த உணவுப் பொருள்களுக்குத் தேவை அதிகமாக உள்ளது என்பது அறிந்து செயல்பட வேண்டும்,” என்று திரு மோடி குறிப்பிட்டார்.

‘தான் தன்யா கிரி‌ஷி யோஜனா’ திட்டத்திற்கு ரூ. 24,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 12 கிராமங்கள், மகாரா‌ஷ்டிராவில் 9 கிராமங்கள், ராஜஸ்தானில் எட்டுக் கிராமங்கள், பீகாரில் 7 கிராமங்கள் தகுதிபெற்றுள்ளன.

தமிழ்நாடு, குஜராத், ஆந்திரா, தெலுங்கானான, ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலிருந்து 4 கிராமங்கள் தகுதிபெற்றுள்ளன.

தானியங்களில் தற்சார்பு அடையும் திட்டத்திற்கு ரூ. 11,440 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது

இந்தத் திட்ட அறிவிப்பின்போது திரு மோடி 1,054 மேம்பாட்டுப் பணிகளை இணையம் வழி திறந்துவைத்தார். மேலும் 50 செயல்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இவை அனைத்தும் வேளாண்துறை சார்ந்தவை.

குறிப்புச் சொற்கள்
மோடிவேளாண்மைவிவசாயம்