தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியாவின் ஆகப் பெரிய கப்பல் முனையத்தைத் திறந்துவைக்கும் மோடி

2 mins read
5ec6b3cf-a54c-43fa-a3b6-00188ad27596
இந்திரா துறைமுகத்தில் கட்டமைக்கப்பட்டுவந்த இந்தியாவின் ஆகப் பெரிய அனைத்துலக கப்பல் முனையத்தை அந்நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமையன்று (செப்டம்பர் 20) திறந்துவைப்பார். - படம்: @kanchangupta/ ‘எக்ஸ்’ தளம்

மும்பை: மகாராஷ்டிரா தலைநகரான மும்பையில் இருக்கும் இந்திரா துறைமுகத்தில் கட்டமைக்கப்பட்டுவந்த இந்தியாவின் ஆகப் பெரிய அனைத்துலக கப்பல் முனையத்தை அந்நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமையன்று (செப்டம்பர் 20) திறந்துவைப்பார்.

கோல்கத்தாவில் உள்ள சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில் புதிய கொள்கலன் முனையத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவிலும் அவர் கலந்துகொள்கிறார்.

அதிகாரத்துவப் பயணமாக குஜராத் மாநிலத்திற்கு வருகை அளித்துள்ள மோடி, அங்கு பாவ்நகரில் நடைபெறும் ‘கடலிலிருந்து செழிப்பு’ நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட ரூ.34,200 கோடி மதிப்புள்ள மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.

மேலும், கடல்சார் துறைக்குப் பெரும் ஊக்கமளிக்கும் வகையில், ரூ.7,870 கோடிக்கு மேல் மதிப்புள்ள பல மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுவார்.

மோடியால் சனிக்கிழமையன்று அடிக்கல் நாட்டப்படும் அனைத்துத் திட்டங்களும் இந்தியத் துறைமுகங்களின் உள்கட்டமைப்பு மேம்பாட்டை உள்ளடக்கியது.

அவற்றில், ஒடிசாவில் இருக்கும் பாரதீப் துறைமுகத்தில் புதிய சரக்கு நிறுத்துமிடம், கொள்கலன் கையாளும் வசதிகள் ஆகியவற்றை அமைத்தல், குஜராத்தில் டுனா டெக்ரா பல்துறை சரக்கு முனையம், தமிழ்நாட்டின் எண்ணூர் பகுதியில் செயல்படும் காமராஜர் துறைமுகம், சென்னை துறைமுகம், (காண்ட்லா) ஆகியவற்றை நவீனமயமாக்குவதற்கான திட்டங்கள், பாட்னா, வாரணாசியில் உள்நாட்டு நீர்வழி வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் போன்றவை அடங்கும்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, துறைமுக உள்கட்டமைப்பு, சாலைகள், சுகாதாரம், நகர்ப்புற போக்குவரத்து போன்ற துறைகளில் குஜராத் மாநிலம் கூடுதல் கவனம் செலுத்தும் வகையில் ரூ.26,354 கோடி மதிப்புள்ள திட்டங்கள் குறித்த அறிவிப்பைப் பிரதமர் மோடி வெளியிடுவார்.

நிலையான தொழில்மயமாக்கல், நவீன உள்கட்டமைப்பு, உலகளாவிய முதலீட்டைச் சுற்றி கட்டமைக்கப்பட்ட பசுமையான தொழில்துறை நகரமாகக் கருதப்படும் தோலேரா சிறப்பு முதலீட்டு வட்டாரத்தை பிரதமர் வான்வழியாக ஆய்வு செய்வார்.

இந்தியாவின் பண்டைய கடல்சார் மரபுகளைக் கொண்டாடவும், பாதுகாக்கவும், சுற்றுலா, ஆராய்ச்சி, கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்கான மையமாகச் செயல்படவும், லோதலில் சுமார் ரூ.4,500 கோடி செலவில் உருவாக்கப்பட்டு வரும் தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகப் பணிகளின் முன்னேற்றத்தையும் அவர் ஆய்வு செய்வார்.

குறிப்புச் சொற்கள்