குஜராத்தில் ரூ.35,000 கோடி திட்டங்களைத் தொடங்கி வைத்த மோடி

குஜராத்தில் ரூ.35,000 கோடி திட்டங்களைத் தொடங்கி வைத்த மோடி

2 mins read
7638fd19-f280-4e66-b211-5910e14d85c5
இந்தியா தற்போது ரயில்வே உற்பத்தித் துறையில் அனைத்துலக மையமாக உருவெடுத்து வருகிறது என்றார் திரு மோடி. - படம்: இந்து தமிழ் திசை
Google News Preferred Icon

வடோதரா: குஜராத் மாநிலம் வடோதராவில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், ரூ.35,000 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களையும் வளர்ச்சிப் பணிகளையும் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

இவ்விழாவில் சிறப்பு மேற்கு சரக்கு ரயில் போக்குவரத்து வழித்தட திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள புதிய பிரிவுகளைப் பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

மொத்தம் 326 கிலோ மீட்டர் தொலைவிலான இந்தப் புதிய சரக்கு ரயில் பாதைகள், சரக்குப் போக்குவரத்தை விரைவுபடுத்தி நாட்டின் பொருளியல் வளர்ச்சிக்குப் பெரும் பக்கபலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிகழ்ச்சியில் உரையாற்றியப் பிரதமர் மோடி, கடந்த 2014ஆம் ஆண்டு முதல் புதிய திட்டங்கள் மூலம் இதுவரை 2,800 கிலோ மீட்டருக்கும் அதிகமான சரக்கு வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும், மும்பை–வடோதரா வழித்தடத்தில் இயக்கப்படும் இரட்டை அடுக்கு சரக்கு ரயில்கள் ஒரே நேரத்தில் 250 லாரிகளின் சரக்குகளைக் கொண்டுசெல்லும் திறன் கொண்டவை என்றும் இதன்மூலம் ரயில்களின் சராசரி வேகம் இருமடங்காக அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்தார்.

கடந்த பத்து ஆண்டுகளில் 50,000க்கும் மேற்பட்ட அதிநவீன ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், இந்தியா தற்போது ரயில்வே உற்பத்தித் துறையில் அனைத்துலக மையமாக உருவெடுத்து வருகிறது என்றார்.

மேலும், 2047ஆம் ஆண்டுக்குள் ‘வளர்ச்சி அடைந்த இந்தியா’ என்ற இலக்கை அடைவதில் இந்திய இளையர்களின் பங்களிப்பு, குறிப்பாக செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட்பத் துறைகளில் மிகவும் முக்கியமானது என்றும் திரு மோடி வலியுறுத்தினார்.

இவ்விழாவில் ரயில்வே, சாலை உள்கட்டமைப்பு தொடர்பான பல்வேறு புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டன.

குறிப்புச் சொற்கள்