இந்தியா: புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைத் திறந்து வைத்தார் மோடி

இந்தியா: புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைத் திறந்து வைத்தார் மோடி

2 mins read
970e02a2-e7af-4b75-8437-81f46ebb200d
படம்: ராய்ட்டர்ஸ் -
Google News Preferred Icon

இந்திய நாடாளுமன்றத்துக்கான புதிய கட்டடத்தைப் பிரதமர் நரேந்திர மோடி மே 28 திறந்து வைத்தார். பழைய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு அருகிலேயே அமைக்கப்பட்டுள்ள அக்கட்டடம் 1,250 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது.

நான்கு மாடிகளுடன் ஏறக்குறைய 65,000 சதுர மீட்டர் பரப்பளவில் அது கட்டப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களின் சிறப்பம்சங்களையும் உள்ளடக்கிய கட்டடக்கலையைப் பயன்படுத்திக் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் மொத்தம் 1,272 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமர முடியும்.

காலை 7.30 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே சிறப்புப் பூசையுடன் நிகழ்ச்சி தொடங்கியது.

தமிழ் மறைகள் முழங்க, தமிழ்நாட்டைச் சேர்ந்த திருவாவடுதுறை, மதுரை உள்ளிட்ட 20 ஆதீனத் தலைவர்கள் செங்கோலைப் பிரதமரிடம் வழங்கினர். அவர்களிடம் ஆசி பெற்றுக்கொண்ட திரு மோடி செங்கோலை மக்களவைத் தலைவரின் இருக்கைக்கு அருகே நிறுவினார்.

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் கட்டுமானப் பணியாளர்களுக்கும் வந்தே மாதரம் பாடலை நாதஸ்வரத்தில் இசைத்த கலைஞர்களுக்கும் அவர் மரியாதை செய்தார்.

திறப்புவிழாவின் இரண்டாம் கட்ட நிகழ்ச்சி தேசிய கீதத்துடன் தொடங்கியது.

அதில் உரையாற்றிய திரு மோடி, "தன்னிறைவு பெற்ற இந்தியாவின் எழுச்சிக்குச் சான்றாக இருக்கும் புதிய நாடாளுமன்றக் கட்டடம் இந்தியாவின் உறுதியை உலகிற்கு எடுத்துச் சொல்வதாக அமைந்துள்ளது," என்றார். இந்தியா விடுதலை பெற்று 75 ஆண்டுகள் நிறைவுபெற்றதைக் குறிக்கும் விதமாக ரூ.75 நாணயத்தையும் புதிய நாடாளுமன்றத் திறப்புவிழாவைக் குறிக்கும் அஞ்சல்தலையையும் அவர் வெளியிட்டார்.

திறப்புவிழாவை ஒட்டி இந்து, இஸ்லாம், கிறிஸ்துவம், பௌத்தம் உள்ளிட்ட பல சமயக் கூட்டு வழிபாடு நடைபெற்றது.

அதிபர்தான் புதிய கட்டத்தைத் திறந்துவைக்க வேண்டும் எனக் கூறி திமுக உள்ளிட்ட 20 எதிர்க்கட்சிகள் திறப்புவிழாவைப் புறக்கணித்தன.

பழைய நாடாளுமன்றக் கட்டடம் அருங்காட்சியமாக மாற்றப்படவிருக்கிறது.

குறிப்புச் சொற்கள்
நாடாளுமன்றம்மோடிஇந்தியா