புதுடெல்லி: வரும் செப்டம்பர் 5ஆம் தேதி, ஆசிரியர் தினத்தையொட்டி, டெல்லி பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரியின் மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாகக் கலந்துரையாட உள்ளார்.
அக்கல்லூரி நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் சூழலில், பிரதமரின் வருகை முக்கியத்துவம் பெறுகிறது.
வணிகவியல், பொருளியல் கல்வியில் முன்னணி நிறுவனமாகத் திகழும் அக்கல்லூரி, தனது நூறாவது ஆண்டை நிறைவு செய்வதையொட்டி இந்தச் சிறப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவில் பங்கேற்கும் பிரதமர், கல்லூரியின் ‘ஜென் ஸீ’ தலைமுறை மாணவர்களுடன் கலந்துரையாட உள்ளார்.
அப்போது, நாட்டின் எதிர்காலம், கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்முனைவு (Entrepreneurship), தொழில்நுட்பம், புதுமைப் படைப்புகள் குறித்து இளைஞர்கள் தங்கள் கருத்துகளையும் எதிர்பார்ப்புகளையும் பிரதமரிடம் நேரடியாகப் பகிர்ந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும்.
இளம் இந்தியர்களின் விருப்பங்களைப் புரிந்துகொள்வதையும், உரையாடல், பங்கேற்புக்கான பரந்த வாய்ப்புகளை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்ட திட்டங்களில் மூத்த தலைவர்கள், இளம் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என்ற எதிர்பார்ப்புடன் உள்ளது பாஜக தலைமை. குறிப்பாக ‘ஜென் ஸி’ தலைமுறையைச் சென்றடையும் முயற்சிக்காக அண்மையில் ஒரு குழுவை அமைத்துள்ளது.
இளையர்களுடனான தகவல்தொடர்பை வழக்கமான அரசியல் திட்டங்களுக்குள் மட்டுப்படுத்தாமல், நேரடி ஈடுபாடு, உரையாடல், பங்கேற்பு ஆகியவற்றில் கட்சியின் ‘ஜென் ஸி’ தலைமுறை அணுகுமுறை கவனம் செலுத்தும் என ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஜகவின் இளையர்களை மையப்படுத்திய இந்த நிகழ்வு தொடர் அரசியல், சமூக வியூகங்களின் ஒரு பகுதியாகவும் அடுத்த தலைமுறை வாக்காளர்களை நேரடியாகச் சென்றடையும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.
நாட்டின் முன்னணி உயர்கல்வி நிறுவனத்தின் நூற்றாண்டு விழா, ஆசிரியர் தினத்தில் பிரதமரின் இந்தச் சந்திப்பு, மாணவர்கள், இளையர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் பாஜக தரப்பில் கூறப்படுகிறது.


