புதுடெல்லி: இந்திய மின் உற்பத்தித் துறையில் அனைத்துலக முதலீட்டாளர்கள் பங்களிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
உலகில் வேகமாக வளர்ந்துவரும் பொருளியலாக இந்தியா திகழ்வதாகக் குறிப்பிட்டுள்ள அவர், நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிக்க மின்சாரத் துறையை வலுப்படுத்துவது அவசியம் என்று தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ‘பாரத மின்சார உச்சநிலை மாநாடு 2026’ வியாழக்கிழமை (மார்ச் 19) நடைபெற்றது.
இதில் பிரதமர் மோடி பங்கேற்காத நிலையில், அவரது உரையை மத்திய மின்சாரத்துறைச் செயலர் பங்கஜ் அகர்வால் வாசித்தார்.
இந்தியா முழுவதும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி அனைவருக்கும் தடையற்ற மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமது உரையில் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் இந்தியா பெருஞ்சாதனை படைத்து வருகிறது என்றும் அவர் கூறினார்.
இந்தியாவின் மின்சார, எரிசக்தி விநியோகச் சங்கிலியில் முதலீடு செய்வதற்கான பெரும் வாய்ப்பை அந்நாடு வழங்குகிறது.
அடுத்த 20 ஆண்டுகளில் மின் உற்பத்தியை வேகப்படுத்த இந்தியாவுக்கு 2.2 டிரில்லியன் டாலர் நிதி தேவைப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
இந்தியாவில் முதலீடு செய்யுங்கள், புதுமைகளைப் புகுத்துங்கள், இந்தியாவுடன் இணைந்து வளர்ச்சி காணுங்கள் என உலக சமுதாயத்துக்குத் தாம் அழைப்பு விடுப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அதே நேரம் நாட்டின் மின்சாரத் துறையை நவீனமயமாக்க கணிசமான முதலீடு தேவை என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
தற்போது இந்தியாவுக்குத் தேவைப்படும் மின்சக்தியில் ஏறக்குறைய 50 விழுக்காடு புதைபடிவமற்ற எரிசக்தி வாயிலாக கிடைக்கிறது என்றார் இந்தியப் பிரதமர்.
எதிர்வரும் 2030ஆம் ஆண்டுக்குள் இத்தகைய பசுமை மின் உற்பத்தியை 500 கிகாவாட்டாக உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றும் திரு மோடி தெரிவித்தார்.
மாநாட்டில் இந்திய மின்சார அமைச்சர் மனோகர் லாலும் தமது கருத்துகளை முன்வைத்தார்.
‘ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே மின்கட்டமைப்பு’ திட்டத்தின் ஓர் அங்கமாக, ஐக்கிய அரபுச் சிற்றரசுகளுடன் இணைந்து, கடலுக்கு அடியில் மின்சாரப் பரிமாற்ற கம்பிவடக் கட்டமைப்பைச் செயல்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

