கெளகாத்தி: அசாம் மாநிலத்தில் ரூ.6,957 கோடி மதிப்பிலான காசிரங்கா உயர்மட்ட வழித்தடத் திட்டத்துக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை மாலை (ஜனவரி 19) அடிக்கல் நாட்டினார்.
பிரதமர் மோடி இரண்டு நாள் அதிகாரத்துவப் பயணமாக சனிக்கிழமை அசாம் சென்றார்.
கின்னஸ் சாதனைக்காக போடோ பழங்குடியினக் கலைஞர்கள் 10,000 பேர் பங்கேற்ற பகுரும்பா நடன நிகழ்ச்சியை அவர் பார்வையிட்டார்.
கெளகாத்தியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கிய திரு மோடி, நகோன், கலியாபோர் ஆகிய பகுதிகளுக்கும் சென்றார்.
அப்போது திரு மோடி ரூ.6,957 கோடி மதிப்பில் அமையவுள்ள காசிரங்கா உயர்மட்ட வழித்தடத் திட்டத்துக்கு பூமி பூஜை போட்டு அடிக்கல் நாட்டினார்.
“காசிரங்கா தேசியப் பூங்கா, புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகளின் பாதுகாப்பான நடமாட்டத்தை உறுதி செய்யவும், தேசிய நெடுஞ்சாலை 715ல் ஏற்படும் சாலை விபத்துகளைக் குறைக்கவும், சுற்றுலாவை மேம்படுத்தவும் இந்த வழித்தடம் உதவும்.
அதே வேளையில், இது உள்ளூர் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும்” என்று அசாம் அரசாங்க அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதற்கிடையே, திப்ரூகர்-கோமதி நகர் (லக்னோ) மற்றும் காமக்யா - ரோத்தக் ஆகிய இரண்டு வழித்தடங்களில் அம்ரித் பாரத் விரைவு ரயில்கள் சேவையைத் திரு மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்து, பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
தொடர்புடைய செய்திகள்
“கட்டமைப்பும் பொருளியலும் இணைந்து முன்னேற முடியும் என்பதை இந்தியா உலகுக்குக் காட்டியுள்ளது.
“அசாமின் வளர்ச்சி ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களுக்கும் வாய்ப்புகளை உருவாக்கித் தரும்,” என்றார் திரு மோடி.
‘கிழக்கு நோக்கிச் செயல்படும் கொள்கை’ வடகிழக்குப் பகுதியைப் புதிய உயரத்துக்கு கொண்டு செல்லும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

