திருவனந்தபுரம்: கேரளாவில் சாலையோர வியாபாரிகளுக்கான கடன் அட்டை திட்டத்தை இந்தியப் பிரதமர் மோடி வெள்ளிக்கிழமையன்று (ஜனவரி 23) தொடங்கி வைத்தார்.
மேலும், திருவனந்தபுரத்திலிருந்து தாம்பரம் வரையிலான அமிர்த பாரத் விரைவு ரயில் உட்பட 3 விரைவு ரயில் சேவைகளையும் ஒரு பயணிகள் ரயில் சேவையையும் கொடி அசைத்து அவர் தொடங்கி வைத்தார்.
அதிகாரத்துவப் பயணமாகக் கேரளாவுக்குப் பயணம் மேற்கொண்ட அவர், அங்குப் பல நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அரசு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டார். அவருடன் கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் இருந்தனர்.
நாட்டின் ரயில் இணைப்பை மேம்படுத்தும் வகையில், நாகர்கோவில் - மங்களூரு, திருவனந்தபுரம் - தாம்பரம், திருவனந்தபுரம் - சார்லபள்ளி ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் மூன்று அமிர்த பாரத் விரைவு ரயில் சேவையையும் திருச்சூர்- குருவாயூர் இடையே ஒரு புதிய பயணிகள் ரயில் சேவையையும் பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார்.
சுகாதாரத் துறை சார்ந்த சில திட்டங்களையும் அவர் தொடங்கிவைத்தார்.
‘‘கேரளாவின் வளர்ச்சிக்கான மத்திய அரசின் முயற்சிகள் புதிய உத்வேகத்தைப் பெற்றுள்ளன. திருவனந்தபுரத்தை இந்தியாவின் ஒரு முக்கிய புது நிறுவனங்களுக்கான மையமாக மாற்றுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
“ஏழைகளுக்கு உதவும் வகையில் பிரதமரின் ஸ்வாநிதி கடன் அட்டை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள நடை பாதை வியாபாரிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் இது பயனளிக்கும்,” என நலத்திட்ட உதவிகளுக்கான தொடக்க விழாவில் உரையாற்றிய மோடி கூறினார்.
மேலும், வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க, ஒட்டுமொத்த நாடும் ஒன்றிணைந்து செயல்படுகிறது எனக் கூறிய அவர், இந்த வளர்ச்சியில் நகரங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்றார்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த 11 ஆண்டுகளாக, இந்திய அரசாங்கம் நகர்ப்புற உள்கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க முதலீடுகளைச் செய்துள்ளதாகவும் இணைப்பு வசதி, அறிவியல், புத்தாக்கம், சுகாதாரத் துறை ஆகியவற்றிலும் அதிக முதலீடுகளைச் செய்து வருவதாகவும் அவர் கூறினார்.
பூஜாப்புரா தலைமை அஞ்சல் அலுவலகக் கட்டடத்தையும் மோடி திறந்துவைத்தார்.
கேரள அரசுக்குப் பொன்னானத் தருணம்: பினராயி விஜயன்
திருவனந்தபுரத்தில் நடந்த அரசு விழாவில் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், அம்மாநில அரசுக்கு இது நிம்மதி அளிக்கும் பொன்னான தருணம் எனக் கூறினார்.
மேலும், “இந்த நேரத்தில் இந்தியப் பிரதமர் மோடிக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன், இந்த அக்கறையும் நல்லெண்ணமும் வரும் காலங்களிலும் கேரளாவுக்குத் தொடர்ந்து காட்டப்படும் என்று நம்புகிறேன்,”என அவர் தெரிவித்தார்.


