பிலிப்பீன்சின் ஆகப் பழைமையான குருத்வாரா சீரமைப்புக்கு மோடி அடிக்கல்

பிலிப்பீன்சின் ஆகப் பழைமையான குருத்வாரா சீரமைப்புக்கு மோடி அடிக்கல்

படம்: எக்ஸ்/@narendramodi

17 Nov 2026 - 5:54 pm

2 mins read

மணிலா: பிலிப்பீன்சின் ஆகப் பழைமையான குருத்வாராவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை (நவம்பர் 17) நேரில் சென்றார். அங்கு நடைபெறவுள்ள மறுமேம்பாட்டுப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவையும் அவர் தலைமையேற்று நடத்தினார்.

மூன்று நாள் பயணமாகப் பிலிப்பீன்ஸ் சென்றுள்ள திரு மோடி, மணிலாவில் உள்ள ஒரு நூற்றாண்டுக்கும் மேலான பழைமைவாய்ந்த குருத்வாரா கல்சா திவானுக்குச் சென்றது தமக்கு மிகுந்த ஆசீர்வதிக்கப்பட்ட உணர்வைத் தருவதாகக் கூறினார்.

இந்நிகழ்வில் செனட்டர் பிரான்சிஸ் ஜோசப் எஸ்குடெரோ, மணிலா நகர மேயர் பிரான்சிஸ்கோ இஸ்கோ மோரெனோ உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

‘கல்சா திவான் குருத்வாரா’ ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இந்தியா - பிலிப்பீன்ஸ் இடையிலான துடிப்பான கலாசார, மக்கள் தொடர்புகளுக்குச் சான்றாகத் திகழ்கிறது என்று இந்திய வெளியுறவு அமைச்சு சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டது.

இந்தக் குருத்வாரா மிகுந்த ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த மையம் எனத் திங்கட்கிழமை திரு மோடி தெரிவித்தார்.

குரு சாஹிப்களின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட சீக்கியச் சமூகம், பிறருக்குச் சேவையாற்றுவதிலும் சிறந்த உலகைக் கட்டமைப்பதிலும் முன்னணியில் இருந்து உலகளவில் முத்திரை பதித்துள்ளதாக அவர் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டார்.

பிலிப்பீன்சின் ஆகப் பழைமையான குருத்வாரா எனும் தனித்துவச் சிறப்பைக் ‘கல்சா திவான்’ கொண்டுள்ளது. மணிலாவில் உள்ள சீக்கிய, பிற சமூகங்களுக்கு ஆன்மிக, கலாசார, தொண்டு நடவடிக்கைகள் மூலம் இது தொடர்ந்து முக்கியப் பங்காற்றுவதாக அவ்வமைச்சு கூறியது.

தென்கிழக்காசிய, கிழக்காசிய நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தவும் வட்டார, உலகளாவிய சவால்கள் குறித்து விவாதிக்கவும் 23வது ஆசியான் - இந்தியா உச்சநிலை மாநாடு, 21வது கிழக்காசிய உச்சநிலை மாநாடு ஆகியவற்றில் பங்கேற்கத் திரு மோடி திங்கட்கிழமை பிலிப்பீன்ஸ் சென்றடைந்தார்.

குறிப்புச் சொற்கள்