மோடி, மார்க் கார்னி சந்திப்பு: இந்தியா, கனடா உறவில் புதிய அத்தியாயம்

மோடி, மார்க் கார்னி சந்திப்பு: இந்தியா, கனடா உறவில் புதிய அத்தியாயம்

2 mins read
41381542-fce0-45d9-9046-85bfb3e599d0
கனடா பிரதமர் மார்க் கார்னியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார் பிரதமர் மோடி. - படம்: ஊடகம்

புதுடெல்லி: இந்தியா-கனடா இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இருதரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கனடா பிரதமர் மார்க் கார்னியின் அழைப்பை ஏற்று ‘ஜி7’ உச்ச மாநாட்டில் கலந்துகொள்ள கனடா சென்றுள்ளார் இந்தியப் பிரதமர் மோடி.

அங்கு பிரதமர் மார்க் கார்னியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதையடுத்து, அண்மைகாலமாக இருதரப்பு உறவுகளில் ஏற்பட்ட கசப்புணர்வு மறைந்து, புதிய தொடக்கம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கனடா பிரதமருடனான சந்திப்பு அருமையாக இருந்ததாக தமது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பிரதமர் மோடி.

“இந்தியாவும் கனடாவும் ஜனநாயகம், சுதந்திரம், சட்டத்தின் அடிப்படையில் வலிமையாக இணைந்துள்ளன. நானும் பிரதமர் கார்னியும் இணைந்து இரண்டு நாடுகளுக்கு இடையேயான நட்புறவுக்கு வலிமை சேர்ப்போம்,” என்றும் பிரதமர் மோடி அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கனடா-இந்தியா இடையே நாடு கடந்த குற்றங்களுக்கு எதிராக, கூட்டுப் பணிக்குழு உருவாக்கத் திட்டமிடப்படுவதாகக் கூறப்படுகிறது.

கனடாவின் முந்திய பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ பொறுப்பு வகித்தபோது, இருதரப்புக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.

கடந்த 2024ஆம் ஆண்டில் இருதரப்பு வர்த்தகம் 8.6 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இந்தியா 4.2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருள்களை ஏற்றுமதி செய்து, 4.4 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருள்களை இறக்குமதி செய்தது.

2024ஆம் ஆண்டில் இருதரப்பு சேவை வர்த்தகம் 14.3 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.

இந்நிலையில், இரு நாடுகளின் தலைவர்களும் நடத்திய பேச்சுவார்த்தையின்போது, புதிய தூதர்களை நியமிக்க இணக்கம் தெரிவித்ததாகவும் இதன் மூலம் புதிய அத்தியாயம் தொடங்குவதாகவும் கனடியப் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்