வாஷிங்டன்: அமெரிக்க உளவுத்துறைத் தலைவர் துளசி கப்பார்டை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். தொடர்ந்து அவர் அதிபர் டோனால்ட் டிரம்ப்பைச் சந்திப்பார்.
அமெரிக்காவுக்கு இரண்டு நாள் அரசு முறைப்பயணமாகச் சென்றுள்ள பிரதமர் மோடி வியாழக்கிழமை (பிப்ரவரி 13) காலை வாஷிங்டனில் அமெரிக்க உளவுத் துறை இயக்குநர் துளசி கப்பார்டைச் சந்தித்தார். இது தொடர்பாக மோடி தமது எக்ஸ் பக்கத்தில், “அமெரிக்க உளவுத்துறைத் தலைவர் துளசி கப்பார்டை நான் வாஷிங்டனில் சந்தித்தேன். அவருடன் இந்திய - அமெரிக்க நட்புறவு குறித்து ஆலோசித்தேன். இந்தியாவுடனான நட்புறவைப் பேணுவதில் துளசி எப்போதுமே உறுதியாக இருப்பவர். அவர் டிரம்ப் அரசாங்கத்தில் முக்கியப் பொறுப்புக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளதற்காக வாழ்த்தும் தெரிவித்தேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
43 வயதான துளசி கப்பார்ட் அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்திலிருந்து ஜனநாயகக் கட்சி சார்பில் நான்கு முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர். அமெரிக்காவின் முதல் இந்து நாடாளுமன்ற உறுப்பினரான இவர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் அல்ல. கடந்த 1981ல் அமெரிக்காவில் பிறந்தவர். அவரது குடும்பத்தினர் இந்து சமயத்துக்கு மாறியுள்ளனர். துளசி அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றி உள்ளார்.
கடந்த 2022ல் ஜனநாயகக் கட்சியில் இருந்து விலகினார். கடந்த ஆண்டு அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியை சேர்ந்த டோனால்ட் டிரம்புக்கு ஆதரவு தெரிவித்தார். தொடர்ந்து தேர்தல் பிரசாரத்தில் டிரம்புக்கு ஆதரவாகப் பேசினார். தனது பிரசார உரையில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிசை விமர்சித்தார். அது டிரம்ப் வெற்றிக்கு உதவியது. இந்நிலையில், உளவுத்துறை இயக்குநராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்கா சென்றுள்ள மோடிக்கு அங்கு வாழும் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு நல்கினர். இதனை சுட்டிக்காட்டிய பிரதமர், “அத்தனை குளிருக்கும் இடையே இந்தியர்கள் இதமான வரவேற்பை நல்கினர். அவர்களின் சிறப்பான வரவேற்புக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், வெளிநாட்டு ஊழல் நடைமுறை சட்டத்தை நிறுத்தி வைக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார்.
‘எப்சிபிஏ’ எனப்படும் வெளிநாட்டு ஊழல் நடைமுறைகள் சட்டத்தை நிறுத்தி வைப்பதற்கான நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இது, அமெரிக்க நிறுவனங்களுக்குப் பாதகமாக இருப்பதாகவும், புதிய சட்டத்தை உருவாக்கும்படியும் அரசாங்க தலைமைச் சட்ட அதிகாரிக்கு அவர் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி அமெரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய தொழிலதிபர் அதானி மீது அமெரிக்க நீதித்துறை குற்றச்சாட்டு பதிவு செய்துள்ள நிலையில் அவருக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக இந்த அறிவிப்பு வந்துள்ளது.