தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாம்பன் பாலத்தைத் திறந்து வைத்தார் பிரதமர் மோடி

3 mins read
6e305a3a-f4a3-4231-936c-3aa2575045ad
பாம்பன் தூக்கு ரயில் பாலத்தைத் தொலையியக்கி மூலம் திறந்து வைக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. - படம்: நரேந்திர மோடி / எக்ஸ்
multi-img1 of 4

ராமேசுவரம்: தமிழ்நாட்டின் ராமேசுவரம் மாவட்டத்தில் பாம்பன் - மண்டபம் இடையே ரூ.550 கோடி மதிப்பில் கட்டப்பட்ட இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு ரயில் பாலத்தை அந்நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 6) திறந்து வைத்தார்.

இந்தியாவுடன் ராமேசுவரத்தை இணைக்கும் வகையில் மண்டபம் கடற்கரையிலிருந்து பாம்பன் கடற்கரை வரை கடலில் ரயில் பாலமும் அதன் நடுவே கப்பல் கடந்து செல்ல தூக்குப் பாலமும் ஆங்கிலேய ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது.

அந்நாட்டில் கட்டப்பட்ட முதல் நீளமான கடல் பாலம் எனும் பெருமையைப் பெற்ற பாம்பன் பாலத்தில் அடிக்கடி தொழில்நுட்பப் பிரச்சினைகள் ஏற்பட்டன.

எனவே, அப்பாலத்திற்கு அருகே புதிய பாலம் ஒன்றை கட்டும் பணி 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அப்பணிகள் நிறைவடைந்தன.

இலங்கைக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தமது பயணத்தை முடித்துக்கொண்டு பாம்பன் பாலத்தைத் திறப்பதற்காக ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் வந்தடைந்தார்.

தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி - சட்டை அணிந்துவந்து பாலத்தை மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

அப்போது, பாம்பன் புதிய ரயில் பாலத்தில் மண்டபத்திலிருந்து புறப்பட்டு வந்த சிறப்பு ரயில் ராமேசுவரம் நோக்கிச் சென்றது.

பின்னர், பாம்பன் புதிய ரயில் பாலத்தில் உள்ள செங்குத்து பாலத்தை மேலே உயர்த்தி கடலோரக் காவல்படைக்கு சொந்தமான கப்பல் பாம்பன் பாலங்களை கடந்து செல்வதையும் பாலத்தின் செயல்பாடுகளையும் மோடி பார்வையிட்டார்.

அந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ், மத்திய செய்தி ஒலிபரப்பு இணையமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, சாமி தரிசனம் செய்வதற்காக கார் மூலம் பாம்பன் சாலைப் பாலத்திலிருந்து ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு சென்றார்.

ரூ.8,300 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன் நிறைவடைந்த திட்டங்களையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

பின்னர், மண்டபம் அருகே நடந்த பாஜக கட்சி நிகழ்ச்சியில் உரையாற்றினார்.

அப்போது, “வளர்ச்சி அடைந்த பாரதம் நோக்கிய பயணத்தில், தமிழ்நாட்டுக்குத் தனி இடம் பிடித்துள்ளது. ராமேஸ்வரம் – சென்னை புதிய ரயில் திட்டம் அவ்வட்டாரத்தின் சுற்றுலா, வர்த்தகத்தை மேம்படுத்துவதுடன் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பையும் அதிகரிக்கும். கடந்த 10 ஆண்டுகளில், இந்தியா தனது பொருளியலை இரட்டிப்பாக்கியுள்ளது,” என மோடி கூறினார்.

“அதற்கு காரணம் நமது கட்டமைப்பு, ரயில், விமானம், சாலைப்போக்குவரத்து ஆகியவற்றின் வளர்ச்சியே,” என்றார் அவர்.

மேலும், “மருத்துவப் படிப்பினை தமிழில் கொண்டுவர வேண்டும் என்பதே எங்களது பெரும் ஆசை. இந்தப் படிப்பினை இளைஞர்கள் படிக்க முடிந்தால் அவர்களது தாய்மார்களும் பயனடைவார்கள். இதனால் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன், மருத்துவப் படிப்பினை தமிழில் கொண்டு வாருங்கள் என்று மாநில அரசைக் கேட்டுக்கொள்கிறேன்,” எனப் பிரதமர் மோடி பேசினார்.

இதற்கிடையே, பயன்பாட்டுக்கு வந்த சிறிது நேரத்தில் பாலம் பழுதானதாகக் கூறப்பட்டது.

செங்குத்துப் பாலத்தை இறக்கும்போது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு பாலம் கோணலாக நிற்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

குறிப்புச் சொற்கள்