தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
டிரம்ப்பிடமிருந்து தப்பிக்கவே மலேசியப் பயணம் தவிர்ப்பு: சாடும் காங்கிரஸ்

ஆசியான் மாநாட்டில் காணொளி மூலம் பங்கேற்கும் மோடி

2 mins read
c6913484-7511-418d-a4b1-98631e436cef
இவ்வாண்டு பிப்ரவரி 13ஆம் தேதி வெள்ளை மாளிகையில் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

கோலாலம்பூர்: மலேசியாவில் நடைபெறவிருக்கும் ஆசியான் மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி காணொளிக்காட்சி மூலம் கலந்துகொண்டு உரையாற்றுவார் என மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 26 முதல் 28 வரை மூன்று நாள்கள் ஆசியான் உச்சநிலை மாநாடு நடைபெறவுள்ளது.

அதில், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், பிரேசில் அதிபர் லூலா டி சில்வா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இந்நிலையில், தீபாவளித் திருநாள் காரணமாக மோடியால் ஆசியான் மாநாட்டில் நேரில் கலந்துகொள்ள முடியவில்லை என ஆசியான் கூட்டமைப்புக்குத் தலைமை தாங்கும் மலேசியா கூறியுள்ளது.

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரத்தை பிரதமர் மோடி அக்டோபர் 24ஆம் தேதி தொடங்கவுள்ளதால் ஆசியான் மாநாட்டில் நேரில் பங்கேற்பதை தவிர்த்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்தியா - அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையே வர்த்தகப் பேச்சுவார்த்தை மும்முரமாக நடைபெற்று வரும் சூழலில், ரஷ்ய எண்ணெய் கொள்முதலை குறைத்துக்கொள்ளப் போவதாகப் பிரதமர் மோடி தனக்கு உறுதி அளித்திருப்பதாக டிரம்ப் அறிவித்தார்.

டிரம்ப்புடன் கூடுதல் வரி விதிப்பு குறித்தும் ரஷ்ய எண்ணெய் கொள்முதல் பற்றியும் மோடி பேசியதை இந்திய அரசு உறுதிப்படுத்தாத நிலையில் குழப்பம் நீடிக்கிறது.

ஆசியான் உச்சநிலை மாநாட்டில் பங்கேற்றால் டிரம்ப்பை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால் மலேசியப் பயணத்தை மோடி தவிர்த்திருக்கக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது.

ஒரு நாட்டுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தை முடிவடைந்த பிறகுதான், தலைவர்கள் நேரில் சந்தித்துக்கொள்வது இந்தியாவின் வழக்கம் எனக் கூறப்படுகிறது.

கடந்த 2014ஆம் ஆண்டு இந்தியப் பிரதமராக மோடி பதவியேற்றபிறகு, 2022ஆம் ஆண்டைத் தவிர அனைத்து ஆசியான் உச்சநிலை மாநாட்டிலும் அவர் பங்கேற்றுள்ளார்.

இந்த முறை ஆசியான் மாநாட்டில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, எகிப்தில் நடைபெற்ற இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான அமைதி ஒப்பந்தம் கையெழுத்து நிகழ்விலும் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அந்த அமைதி மாநாடு டிரம்ப் தலைமையில் நடைபெற்றதால், மோடி நேரில் செல்வதை தவிர்த்து, வெளியுறவுத்துறை இணையமைச்சரை அனுப்பிவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, டிரம்ப்பிடமிருந்து தப்பிக்கவே மலேசியப் பயணத்தை மோடி தவிர்த்ததாகக் காங்கிரஸ் சாடியுள்ளது.

குறிப்புச் சொற்கள்