இந்தியாவின் ஜனநாயகம் பன்முகத்தன்மையுடன் கூடிய வளர்ச்சிக்கு முன்மாதிரி: மோடி

3 mins read
bb53bc44-3ed0-4f47-a6f1-fc18837dea52
இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற காமன்வெல்த் நாடுகளின் சபாநாயகர்கள், தலைமை அதிகாரிகளின் 28வது மாநாட்டில் வியாழக்கிழமை (ஜனவரி 15) உரையாற்றிய பிரதமர் மோடி. - படம்: டாக்டர் சம்பித் பிரதா/ ஃபேஸ்புக்

புதுடெல்லி: இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகத்தை பன்முகத்தன்மையுடன் கூடிய வளர்ச்சிக்கான ஒரு முன்மாதிரியாக என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இந்தியாவில், ஜனநாயகம் உண்மையாகவே பலன்களை வழங்குகிறது; இந்தியாவில், ஜனநாயகம் என்பது கடைக்கோடி மக்களுக்கும் பலன்களை வழங்குகிறது என்றார் அவர்.

காமன்வெல்த் நாடாளுமன்ற சபாநாயகர்கள், தலைமை அதிகாரிகளின் 28வது மாநாட்டைத் தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார்.

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, இவ்வளவு பெரிய பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டில் ஜனநாயகம் இருக்குமா என்ற பலத்த சந்தேகம் உலகளவில் இருந்தது. ஆனால், இந்தியாஅது சாத்தியம் என்பதை மெய்ப்பித்துள்ளது. பன்முகத்தன்மையை ஜனநாயகத்தின் மிகப்பெரிய பலமாக மாற்றிக்காட்டியது என்றார் அவர்.

உலகம் முன்னெப்போதும் இல்லாத மாற்றங்களைச் சந்தித்து வரும் வேளையில், வளரும் நாடுகள் புதிய பாதைகளை உருவாக்க வேண்டிய தருணத்தை எதிர்கொண்டுள்ளதாக மோடி தெரிவித்தார்.

உலகளாவிய தளங்களில் வளரும் நாடுகளின் நலன்களுக்காக இந்தியா வலுவாகக் குரல் கொடுக்கிறது. இந்தியா ஜி20 அமைப்புக்குத் தலைமையேற்றபோது, ​​தெற்குலக நாடுகளின் கவலைகளை உலகளாவிய நிகழ்ச்சி நிரலில் பதிவு செய்தது.

நாட்டின் எந்தவொரு கண்டுபிடிப்பும் ஒட்டுமொத்தமாகத் தெற்குலக, காமன்வெல்த் நாடுகளுக்குப் பயனளிப்பதை உறுதி செய்வதே இந்தியாவின் தொடர்ச்சியான முயற்சியாகும்.

தெற்குலக நாடுகளில் உள்ள இந்தியாவின் பங்காளி நாடுகளும் இந்தியாவில் உள்ளதைப் போன்ற அமைப்புகளை உருவாக்கக்கூடிய வகையில், வெளிப்படையான மூல தொழில்நுட்பத் தளங்களை இந்தியா உருவாக்கி வருகிறது என அவர் சொன்னார்.

பொது நலன் என்ற உணர்வால் உந்தப்பட்டு, அனைவரையும் உள்ளடக்கிய வகையில் இந்தியா செயல்படுகிறது. இந்த அர்ப்பணிப்புதான் அண்மைய ஆண்டுகளில் கிட்டத்தட்ட 25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்க இந்தியாவிற்கு உதவியது.

ஜனநாயகம் பற்றிய அறிவையும் புரிதலையும் எவ்வாறு மேம்படுத்தப் போகிறோம் என்பதுதான் இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாகும். இதில் சபாநாயகர்கள், தலைமை அதிகாரிகளின் பங்கு மிக முக்கியமானது.

இந்தியாவின் ஜனநாயகம் ஆழமான வேர்களால் தாங்கப்படும் ஒரு பெரிய மரம் போன்றது. விவாதங்கள், உரையாடல்கள், கூட்டு முடிவெடுக்கும் நீண்ட பாரம்பரியம் இந்தியாவுக்கு உண்டு. இந்தியா ஜனநாயகத்தின் தாய் என்று அழைக்கப்படுகிறது.

இந்தியாவின் 2024 பொதுத் தேர்தலில் ஏறக்குறைய 980 மில்லியன் பேர் வாக்களிக்கப் பதிவு செய்திருந்தனர். 8,000க்கும் மேற்பட்ட வேட்பாளர்களும் 700க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளும் தேர்தலில் பங்கேற்றன. இந்த எண்ணிக்கை சில கண்டங்களின் மக்கள்தொகையை விடப் பெரியது.

பெண் பிரதிநிதித்துவம் இந்திய ஜனநாயகத்தின் மற்றொரு வலுவான தூண். இன்று இந்தியப் பெண்கள் ஜனநாயகத்தில் பங்கேற்பதுடன், அதனை முன்னின்று வழிநடத்துகிறார்கள்.

இந்தியாவின் அதிபராகவும் டெல்லியின் முதல்வராகவும் பெண்கள் உள்ளனர். உள்ளாட்சி, கிராமப்புற அமைப்புகளில் ஏறக்குறைய 15 லட்சம் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகள் உள்ளனர். அடிமட்ட அளவிலான தலைமைத்துவத்தில் இவர்கள் கிட்டத்தட்ட 50 விழுக்காட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். இது உலக அளவில் முன்னெப்போதும் இல்லாத ஒரு சாதனையாகும்.

பன்முகத்தன்மை கொண்ட இந்திய ஜனநாயகம் மிகவும் வளமானது. நாடு முழுதும் நூற்றுக்கணக்கான மொழிகள் பேசப்படுகின்றன. இந்தத் துடிப்பும் தன்மையும் இந்திய ஜனநாயகத்தின் உண்மையான பலம் என்றார் மோடி.

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நடைபெறும் இந்த உயர்மட்ட மாநாட்டில், 42 காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த 61 சபாநாயகர்கள், தலைமை அதிகாரிகள், நான்கு பகுதி தன்னாட்சி பெற்ற நாடாளுமன்றங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்