புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் சனிக்கிழமை தொடங்கும் 18வது பிரிக்ஸ் உச்சநிலைமாநாட்டிற்கு இடையே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினும் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 11) இருதரப்புப் பேச்சுவார்த்தையைத் தொடங்கினர்.
இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவிவரும் நட்புமுறையை மேலும் வலுப்படுத்தும் வகையில் வணிகம், பொதுப் பயன்பாட்டுக்கான அணுசக்தி, பாதுகாப்பு, உரம், கச்சா எண்ணெய் விநியோகம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
குறிப்பாகப் பிரம்மோஸ் ஏவுகணை அமைப்பை மேம்படுத்துதல், எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பின் எஞ்சிய விநியோகங்களை நிறைவு செய்தல், சுகோய் சு-57 போர் விமானங்களை இந்தியாவுக்கு வழங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
ரஷ்ய அதிபருக்கு, திரு மோடி தமிழ் செம்மொழி நூலான ‘திருக்குறளின்’ ரஷ்ய மொழிபெயர்ப்புப் பிரதியை பரிசாக வழங்கினார்.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் 2026ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்நூலை நைரா மிகிர்ட்சியன் (Naira Mkrtchyan) ரஷ்ய மொழியில் மொழிபெயர்த்துள்ளார். அறம், அரசியல், நீதி, ஒழுக்கம் ஆகியவற்றை விளக்கும் உலகப் புகழ்பெற்ற திருக்குறள், பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
ஈராண்டுகளில் இவ்விரு தலைவர்களும் சந்தித்துப் பேசுவது இது இரண்டாவது முறையாகும். கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின்போது பிரதமர் மோடி, உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவருமாறு அதிபர் புட்டினைக் கேட்டுக்கொண்டிருந்தார்.
2022ல் உக்ரேன் போர் தொடங்கிய பின்னர், ரஷ்யாவிற்கு வெளியே நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டில் திரு புட்டின் நேரில் பங்கேற்பது இதுவே முதன்முறை. போரை முடிவுக்குக் கொண்டுவர தூதரக வழிமுறைகளை இந்தியா வலியுறுத்தி வரும் அதேவேளையில், தனது நாட்டின் வளர்ந்து வரும் பொருளியல் தேவைகளுக்கு மலிவான ரஷ்யக் கச்சா எண்ணெய்யை இந்தியா பெருமளவில் இறக்குமதி செய்து வருகிறது.
கடந்த ஜூலை மாதத்தில் இந்தியாவின் மொத்தக் கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு 51 விழுக்காடாக உயர்ந்தது. அனைத்துலக அழுத்தங்களுக்கு மத்தியிலும், நாட்டின் பொருளியல் தேவைகளுக்காக ரஷ்யாவுடனான வணகம், உத்திசார் உறவை இந்தியா தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபுச் சிற்றரசு, சவூதி அரேபியா, இந்தோனீசியா ஆகிய 11 முக்கியப் பொருளியல் நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் கூட்டமைப்பின் உச்சநிலை மாநாடு செப்டம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இந்த மாநாட்டிற்கு 4வது முறையாக இந்தியா தலைமை வகிக்கிறது.
மாநாட்டில், அமெரிக்காவின் சுங்கவரி அச்சுறுத்தல்கள், ஈரான் போர் உள்ளிட்டவை முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளன. உலக மக்கள் தொகையில் 49 விழுக்காட்டைக் கொண்டுள்ள பிரிக்ஸ் கூட்டமைப்பு, அமெரிக்க டாலருக்கு மாற்றாகச் சொந்த நாணயங்களில் வணிகம் செய்வதை ஊக்குவித்து வருகிறது.
அனைத்துலக அளவில் சீனாவுக்கு இணையாகத் தெற்காசியா மற்றும் வளரும் நாடுகளின் தலைவராகத் தன்னை உயர்த்திக்கொள்ள முயலும் இந்தியாவிற்கு, இம்மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிப்பது ஒரு முக்கிய உத்திசார்ந்த வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது.

