தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அரசியலில் இருந்து ஓய்வு பெறும் மோடி: ஆர்எஸ்எஸ் தலைவர் கருத்தால் சலசலப்பு

2 mins read
a0d24da1-b2f8-4872-839f-588c794f9776
பிரதமர் மோடி, மோகன் பகவத். - படம்: ஊடகம்

புதுடெல்லி: பிரதமர் பதவியில் இருந்து நரேந்திர மோடி ஓய்வு பெறப்போகிறாரா என்று ஒருதரப்பினர் மீண்டும் பேசவும் விவாதிக்கவும் தொடங்கியுள்ளனர்.

இதனால் டெல்லி அரசியல் களத்தில் திடீரென சலசலப்பும் பரபரப்பும் நிலவுகின்றன.

பாஜகவின் தோழமை அமைப்புகளில் ஒன்றான ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் வெளியிட்ட அறிக்கைதான் பிரதமர் மோடியின் அரசியல் எதிர்காலம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில் 75 வயதைக் கடந்தவர்கள் இடம்பெறவில்லை.

75 வயதுக்குப் பின்னர் அரசியல் ஓய்வு என்பது பாஜகவில் எழுதப்படாத விதிமுறையாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நிலையில், பிரதமர் மோடிக்கு அடுத்த ஆண்டு 75 வயதாகப் போகிறது.

எனவே தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அண்மையில் இதுகுறித்து மறைமுகமாக கருத்து தெரிவித்திருந்தார்.

“ஒருவர் 75 வயதை எட்டிய பிறகு தனது பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு ஓய்வெடுக்க வேண்டும்,” என்பதே அவரது கருத்தின் சுருக்கம்.

இதுதான் புதிய விவாதத்திற்கும் சர்ச்சைக்கும் வித்திட்டுள்ளது.

மோகன் பகவத்துக்கும் தற்போது 74 வயதாகிறது. அவர் தன் கூற்றுப்படி அடுத்த ஆண்டு பதவியில் இருந்து ஓய்வு பெறுவாரா என்பது குறித்து விவாதம் எழுந்துள்ளது.

மோகன் பகவத்தின் அண்மைய அறிக்கைகளைத் தொடர்ந்து, சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் கூறுகையில், “மோகன் பகவத் 75 வயதில் ஓய்வு பெற விரும்பினால், அதே விதி மோடிக்கும் பொருந்தும். அவருக்கு இப்போது 74 வயது ஆகிறது,” என்றார்.

குறிப்புச் சொற்கள்