புதுடெல்லி: பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியாவும் இஸ்ரேலும் தொடர்ந்து இணைந்து செயல்படும் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமருடன் அவர் தொலைபேசி மூலம் உரையாடியதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்மொழிந்துள்ள காசாவின் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என இஸ்ரேல் வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெட்டன்யாகுவுடன் மோடி ஆலோசனை நடத்தியதாக இந்தியப் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காசா பகுதியில் நீடித்த அமைதி நிலவ வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு என்றும் அதற்குத் தனது உறுதியான, நிலையான ஆதரவை இந்தியா வழங்கும் என்றும் இஸ்ரேல் பிரதமரிடம் திரு மோடி உறுதி அளித்துள்ளார்.
எந்த வடிவத்திலான பயங்கரவாதத்தையும் சகித்துக்கொள்ள முடியாது என்றும் இத்தகைய அணுகுமுறையை இருநாடுகளும் தொடர்ந்து கடைப்பிடிக்கும் என்றும் இரு தலைவர்களும் உறுதி அளித்தனர்.
இந்தத் தொலைபேசி உரையாடலின்போது எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக இந்திய பிரதமர் அலுவலக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

