புதுடெல்லி: மின்னிலக்கக் காலத்தில் தொழில்நுட்பங்களுக்காகப் பிற நாடுகளைச் சார்ந்திருக்காமல் அவற்றை இந்தியாவிலேயே உருவாக்க வேண்டும் என்று அந்நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
புதுடெல்லியில் நடைபெற்ற கைப்பேசி மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அவர், இந்தியாவில் மின்னிலக்கம் சார்ந்த விழிப்புணர்வு அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டார்.
இந்தியாவில் கணினி விளையாட்டுத் துறை மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்து வருவதாகக் கூறிய அவர், சிறார் தொடர்ந்து கற்கவும் தொலைதூரப் பணிகளை வீட்டில் இருந்தபடி தடையின்றி மேற்கொள்ளவும் மின்னிலக்கத் தொழில்நுட்பமே அடித்தளமாக அமைந்துள்ளதாகவும் கூறினார்.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடுகள் குறித்து எச்சரித்த அவர், தற்போது வன்போலிக் காணொளிகளால் பெருஞ்சவால்கள் எழுந்துள்ளன என்றும் அதன் தீவிரத்தை உணர்ந்து, அத்தகைய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள உலகளவில் வலுவான கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், இணையத்தில் பரவும் போலிச் செய்திகள், இணையவழி மோசடிகள், பிற மின்னிலக்க அச்சுறுத்தல்கள் குறித்து பொதுமக்கள் மிகவும் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
கிராமப்புற இணைப்பு
தொலைத்தொடர்புத் துறையின் வளர்ச்சியைச் சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, கடந்த 10 முதல் 12 ஆண்டுகளில் நாட்டின் தொலைத்தொடர்புக் கட்டமைப்பு கணிசமாக விரிவடைந்துள்ளது என்றார்.
கிராமப்புற, தொலைதூரப் பகுதி மக்களுக்குக் குறைந்த செலவில் கைப்பேசி இணைப்பு கிடைப்பதை உறுதிசெய்ய, அதிக அளவில் கைப்பேசிக் கோபுரங்களை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.
விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிதி உதவித் தகவல்கள் நேரடியாக அவர்களின் கைப்பேசிகளுக்கே உடனுக்குடன் குறுஞ்செய்தியாக அனுப்பப்படுவதைச் சுட்டிய அவர், தொழில்நுட்ப மாற்றத்தின்மூலம் வசதிகுறைந்த மக்கள் அரசுத் திட்டங்களை எளிதில் அணுகும் நிலை உருவாகியுள்ளது என்றார்.
