புதுடெல்லி: மாணவர்களிடையே போதைப்பொருள் அபாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துமாறும் அவர்கள் மின்னிலக்கத் திரைகளில் செலவிடும் நேரத்தைக் குறைக்க உதவுமாறும் ஆசிரியர்களுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆண்டுதோறும் செப்டம்பர் 5ஆம் தேதி இந்தியாவில் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு, தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுடன் பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 4) கலந்துரையாடினார்.
அப்போது, “மாணவர்களின் தங்கள் குழந்தைப் பருவத்தை இழந்துவிட ஆசிரியர்கள் அனுமதிக்கக் கூடாது. மாணவர்களின் வாழ்வில் அதனை உயிர்ப்புடன் வைத்திருப்பதில் ஆசிரியர்களே மிகப்பெரிய பங்களிப்பை வழங்க முடியும்,” என்று அவர் கூறினார்.
மாணவர்களின் கல்விச் செயல்பாட்டைத் தாண்டி, அவர்களின் அன்றாட வாழ்க்கையிலும் நடத்தையிலும் ஆசிரியர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று திரு மோடி வலியுறுத்தினார்.
கூட்டுக்குடும்பமாக வாழ்வது குறைந்துவரும் சூழலில், குழந்தைகளின் வாழ்வில் ஆசிரியர்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்றார் அவர்.
பெரிய நகரங்களிலும் பல்கலைக்கழகங்களிலும் போதைப்பொருள் புழக்கத்தைக் கண்டறிவது கடினம் எனக் குறிப்பிட்ட பிரதமர், குழந்தைகள் நேர்மறையான, புத்தாக்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஊக்கப்படுத்த வேண்டும் என்றார்.
மாணவர்கள் விளையாட்டுகளிலும் வெளிப்புற நடவடிக்கைகளிலும் ஆர்வம் காட்டுவதன்மூலம் அவர்களின் கைப்பேசித் திரை நேரத்தை இயற்கையாகவே குறைக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
மாணவர்கள் இரவில் நீண்ட நேரம் கைப்பேசியில் செலவிடுவது குறித்து அவர்களின் பெற்றோரிடம் பேசுமாறும் ஆசிரியர்களைப் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
அத்துடன், அதிகமான பெண்கள் மார்பகப் புற்றுநோய்ப் பரிசோதனை செய்துகொள்ள முன்வருவதை வரவேற்ற அவர், வாரணாசியில் தொடங்கப்பட்ட மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் கின்னஸ் சாதனை படைத்ததையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.
இவ்வாண்டு மூன்று துறைகளிலிருந்து 82 ஆசிரியர்கள் தேசிய ஆசிரியர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.


