புதுடெல்லி: இந்தியப் பிரிவினையால் பாதிக்கப்பட்ட மக்களின் தியாகத்தையும் துணிச்சலையும் நினைவுகூரும் ‘பிரிவினை கொடுமைகள் நினைவு நாளில்’ வளர்ந்த இந்தியாவை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்ல இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“இன்று பிரிவினை கொடுமைகள் நினைவு நாள். பிரிவினையால் பாதிக்கப்பட்ட அனைவரின் தைரியத்தையும் இன்று நினைவுகூர்கிறோம்.
“நாட்டின் நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் பாதுகாக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 14) தமது எக்ஸ் தளப் பதிவில் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வரலாற்றில் பிரிவினை என்பது பல உயிர்களைச் சிதைத்து, குடும்பங்களைப் பிரித்து, அளப்பரிய துன்பத்தை ஏற்படுத்திய ஒரு வேதனையான தருணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், அந்தப் பெரும் துயரத்தைக் கடந்து மக்கள் தங்களது வாழ்க்கையை மீண்டும் புதிதாகத் தொடங்கி, நாட்டின் முன்னேற்றத்தில் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பு அவர்களின் மன வலிமையைக் காட்டுவதாக அவர் பாராட்டினார்.
1947ஆம் ஆண்டு இந்தியாவின் பிரிவினையின்போது உலகின் மிகப்பெரிய இடப்பெயர்வு நிகழ்ந்தது. ஏறத்தாழ இரண்டு கோடி மக்கள் இடம்பெயர்ந்ததுடன், ஏற்பட்ட வன்முறைகளில் பல்லாயிரக்கணக்கானோர் பலி ஆனார்கள். அகதிகளாக மாறிய பல குடும்பங்கள் தங்களின் அன்புக்குரியவர்களை இழந்தன.
அந்த வரலாற்றுச் சோகத்தை நினைவுகூரும் வகையில் ஆகஸ்ட் 14ஆம் தேதி கடைப்பிடிக்கப்படும் இந்நாளில், இந்திய மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு நாட்டின் ஒற்றுமையைப் பாதுகாக்கவும், ‘வளர்ந்த இந்தியா’ எனும் இலக்கை நோக்கி முன்னேறவும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.


