அமைதியை நோக்கி நகர வேண்டும்: புட்டினிடம் மோடி வலியுறுத்து

அமைதியை நோக்கி நகர வேண்டும்: புட்டினிடம் மோடி வலியுறுத்து

2 mins read
afc42ef5-768b-4015-a905-507e246bbd23
இதற்குப் பதிலளித்த அதிபர் புட்டின், இந்தியா-ரஷ்யா இடையிலான வர்த்தக உறவுகள் 2%க்கும் மேல் அதிகரித்து வலுவடைந்து வருவதாக ரஷ்ய அதிபர் புட்டின் குறிப்பிட்டார். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

புதுடெல்லி: முடிவில்லாப் போரிலிருந்து அமைதியை நோக்கி நகர வேண்டும் என ரஷ்ய அதிபர் புட்டினுடனான சந்திப்பின்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சநிலை மாநாட்டில் பங்கேற்க கிர்கிஸ்தான் சென்ற பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினைத் தனியாகச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, உக்ரேன் மோதல், கருங்கடல் வட்டாரப் பதற்றங்கள் குறித்து இரு தலைவர்களும் தீவிர ஆலோசனை நடத்தினர்.

மேலும், உலக நாடுகள் முடிவில்லாப் போரிலிருந்து விலகி, போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அமைதிப்பாதையை நோக்கி நகர வேண்டும் என்றும் பேச்சுவார்த்தை, அரசதந்திர வழிகளே சிக்கல்களுக்குத் தீர்வுகாணும் ஒரே வழி என்றும் திரு மோடி நேரடியாக வலியுறுத்தினார்.

மேலும், கருங்கடல் பகுதியில் இந்தியக் கடற்படையினர் எதிர்கொள்ளும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்தும் தனது கவலையை அவர் பதிவு செய்தார்.

இதற்குப் பதிலளித்த அதிபர் புட்டின், இந்தியா-ரஷ்யா இடையிலான வர்த்தக உறவுகள் 2%க்கும் மேல் அதிகரித்து வலுவடைந்து வருவதாகக் குறிப்பிட்டார்.

எரிசக்தி, தொழில்நுட்பம், உரம், விண்வெளித் துறைகளில் இருநாடுகளின் கூட்டாண்மை புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக இரு தலைவர்களும் மனநிறைவு தெரிவித்தனர்.

டெல்லியில் நடைபெறவுள்ள 18வது பிரிக்ஸ் (BRICS) உச்சநிலை மாநாட்டிற்கு வருகை தருமாறு புட்டினுக்குப் பிரதமர் மோடி முறைப்படி அழைப்பு விடுத்தார். உலகளாவிய பொருளியல் நெருக்கடிகளுக்கு நடுவே, இரு தலைவர்களின் இச்சந்திப்பு அனைத்துலக அரங்கில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

51 இந்தியர்கள் உயிரிழப்பு

ரஷ்ய ஆயுதப் படைகளில் உக்ரேன் போருக்காகச் சேர்க்கப்பட்ட இந்தியர்களில் 51 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக இந்திய அரசு அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளது.

கிர்கிஸ்தானில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சநிலை மாநாட்டின் இடையே, இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்களிடம் பேசுகையில் இத்தகவலைப் பகிர்ந்துகொண்டார்.

ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்கள் சேர்க்கப்பட்டது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அவர், “எங்கள் கணிப்பின்படி இதுவரை மொத்தம் 227 இந்தியர்கள் ரஷ்ய படைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 139 பேர் ராணுவத்திலிருந்து விடுவிக்கப்பட்டு சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக 51 பேர் போரில் உயிரிழந்துவிட்டனர்,” என்றார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் ஆகியோரின் சந்திப்பின்போது, இந்த விவகாரம் முக்கியமாக விவாதிக்கப்பட்டது.

ரஷ்யப் படைகளில் எஞ்சியுள்ள அனைத்து இந்தியர்களையும் உடனடியாக விடுவித்து, தாயகம் அழைத்துவர தூதரக ரீதியிலான தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்புச் சொற்கள்
புட்டின்ரஷ்யாபிரதமர்நரேந்திர மோடிசந்திப்புபேச்சுவார்த்தைர‌ஷ்யாமத்திய கிழக்குபோர்ஆயுதப்படைஉக்ரேன்பிரிக்ஸ்