புதுடெல்லி: இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் இந்தியப் பிரதமர் மோடியை திங்கட்கிழமை (ஜனவரி 6) நேரில் சந்தித்துப் பேசினார்.
அப்போது இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையேயான விரிவான உலகளாவிய உத்திசார் கூட்டணியில், குறிப்பாக தொழில்நுட்பம், பாதுகாப்பு, விண்வெளி, சிவில் அணுசக்தி, தூய்மையான எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு ஆகிய முக்கிய துறைகளில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றம் குறித்து மதிப்பீடு செய்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்தது.
இந்தச் சந்திப்பின்போது, ‘குவாட்’ தலைவர்களின் உச்ச நிலை மாநாட்டிற்காக கடந்த ஆண்டு செப்டம்பரில் அமெரிக்கா சென்றது உட்பட அந்நாட்டு அதிபர் பைடனுடனான தனது பல்வேறு சந்திப்புகள் குறித்துப் பிரதமர் மோடி நினைவுகூர்ந்ததாக பிரதமர் அலுவலகச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
மேலும், அதிபர் பைடன், பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தை ஒப்படைத்தார் ஜேக் சல்லிவன்.
அதைப் படித்துப் பார்த்த பிரதமர் மோடி, அமெரிக்க அதிபரைப் பாராட்டியதாக பிடிஐ குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவும் இந்தியாவும் இருதரப்புக்கும் இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் அவசியத்தை பிரதமர் மோடி மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், இருநாட்டு மக்களின் நலனுக்காகவும் உலக நலனுக்காகவும் இந்த நடவடிக்கை அவசியம் என வலியுறுத்தினார்.
இதற்கிடையே, இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலையும் நேரில் சந்தித்துப் பேசினார் ஜேக் சல்லிவன்.
அப்போது, இந்திய அணுசக்தி நிறுவனங்கள் மற்றும் அமெரிக்க நிறுவனங்களுக்கு இடையேயான சிவில் அணுசக்தி ஒத்துழைப்புக்கான நீண்ட கால விதிமுறைகளை அமெரிக்கா நீக்க உள்ளதாக ஜேக் சல்லிவனிடம் அறிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
இருதரப்பு ஒத்துழைப்பை முன்னேற்றுவதில் இது ஒரு முக்கியமான நடவடிக்கை என்று அவர் குறிப்பிட்டார்.
இதன் மூலம் அமெரிக்க தனியார் துறை விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்களுடன் இணைந்து செயல்படுவதில் இருந்து வந்த தடைகள் அகற்றப்படும்.
“சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு தொடர்பாக 20 ஆண்டுகளுக்கு முன்பே முன்னாள் அதிபர் புஷ், முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரும் தொலைநோக்குப் பார்வையை வகுத்திருந்தாலும், அந்த நடவடிக்கை இன்னும் முழுமை பெறவில்லை,” என்று டெல்லி ஐஐடி கல்வி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும்போது ஜேக் சல்லிவன் குறிப்பிட்டார்.
கடந்த நான்கு ஆண்டுகளில் இருதரப்பு வியூகக் கூட்டாண்மை, இந்தியாவின் வெளிப்படையான ஈடுபாடு ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அமெரிக்காவின் இந்த முடிவு பிரதிபலிக்கிறது என்றார் சல்லிவன்.


