மோடி காணொளி நீக்கம்: ‘மெட்டா’விடம் விளக்கம் கோரும் இந்திய அரசு

மோடி காணொளி நீக்கம்: ‘மெட்டா’விடம் விளக்கம் கோரும் இந்திய அரசு

1 mins read
60aac142-4246-4669-87e3-acb7553db453
கடந்த 23ஆம் தேதி நள்ளிரவு பிரதமர் மோடி காணொளி ஒன்றை வெளியிட்டார். - படம்: இந்து தமிழ் திசை

புதுடெல்லி: சமூக ஊடகத்தளமான ஃபேஸ்புக் தளத்திலிருந்து பிரதமர் மோடியின் காணொளி நீக்கப்பட்டது தொடர்பாக ‘மெட்டா’ நிறுவனத்திற்கு இந்திய அரசு விளக்கம் கோரி அழைப்பாணை அனுப்பியது.

டெல்லியில் அண்மையில் ஆயிரக்கணக்கான இளையர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, கடந்த 23ஆம் தேதி நள்ளிரவு பிரதமர் மோடி காணொளி ஒன்றை வெளியிட்டார். அதில், ‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என அவர் உறுதி அளித்திருந்தார்.

இந்தக் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட நிலையில், ‘ஃபேஸ்புக்’ தளத்தில் இருந்து திங்கட்கிழமை (ஜூலை 27) திடீரென நீக்கப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த இந்திய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சு, இதுகுறித்து விளக்கம் கோரி, ‘மெட்டா’வின் அனைத்துலக விவகாரங்களுக்கான பிரிவின் தலைவர் ஜோயல் கப்லான், ‘இன்ஸ்டகிராம்’ தலைவர் ஆடம் முசேரி ஆகியோருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், நடந்த தவற்றுக்கு மன்னிப்பு கோருவதாக ‘மெட்டா’ செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திரு மோடியின் காணொளி தவறுதலாக நீக்கப்பட்டுவிட்டது என்றும் அது மீண்டும் பதிவேற்றம் செய்யப்பட்டது என்றும் ‘மெட்டா’ விளக்கம் அளித்துள்ளது.

எனினும் இந்த விளக்கம் ஏற்புடையதாக இல்லை என்பதால் மெட்டா நிறுவன மூத்த அதிகாரிகளை நேரில் அழைத்து விளக்கம் கோரியுள்ளதாக இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

குறிப்புச் சொற்கள்
பிரதமர்மோடிசமூக ஊடகம்மெட்டாகாணொளி