புதுடெல்லி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் பயணம் மேற்கொண்டு அக்டோபர் 10ஆம் தேதி லாவோஸ் செல்கிறார்.
21வது ஆசியான் - இந்தியா உச்சநிலை மாநாட்டிலும் 19வது கிழக்காசிய உச்சநிலை மாநாட்டிலும் அவர் கலந்துகொள்வார்.
இந்திய வெளியுறவு அமைச்சு அக்டோபர் 8ஆம் தேதி இவ்வாறு தெரிவித்துள்ளது.
லாவோஸ் தற்போது ஆசியான் அமைப்பின் தலைமைப் பொறுப்பில் உள்ளது. அந்நாட்டுப் பிரதமர் சொனக்சே சிபான்டோனின் அழைப்பை ஏற்று திரு மோடி வியந்தியன் செல்கிறார்.
ஆசியான் - இந்தியா உச்சநிலை மாநாட்டில், விரிவான உத்திபூர்வ பங்காளித்துவம் மூலம் இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து மறுஆய்வு செய்யப்படும். வருங்கால ஒத்துழைப்புக்கான திட்டமிடலும் இடம்பெறும் என்று அமைச்சு தெரிவித்தது.
கிழக்காசிய உச்சநிலை மாநாட்டில் தலைவர்கள், வட்டார அளவிலான உத்திபூர்வ நம்பகத்தன்மை மிகுந்த சூழலை உருவாக்குவது குறித்தும் வட்டார முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்தும் கலந்துரையாடுவர்.
வியந்தியனில் உச்சநிலை மாநாடுகளுக்கிடையே பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி இருதரப்புச் சந்திப்புகளை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.