இம்பால்: இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் 2023 மே மாதம் வன்முறை வெடித்த பிறகு, முதன்முறையாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (செப்டம்பர் 13) அங்கு செல்கிறார் என்பதை அம்மாநில தலைமைச் செயலாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தப் பயணம் குறித்து கடந்த சில நாள்களாக ஊகம் நிலவிவந்த வேளையில், இப்போது இதுபற்றி அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளிவந்துள்ளது.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய மணிப்பூர் தலைமைச் செயலாளர் புனீத் குமார் கோயல், இந்திய நேரப்படி சனிக்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் மிசோரமில் உள்ள ஐசால் நகரிலிருந்து சுராசந்த்பூர் மாவட்டத்திற்கு திரு மோடி வருகை தருவார் என்றும் அங்கு வன்முறையால் இடம்பெயர்ந்த மக்களுடன் அவர் உரையாடுவார் என்றும் தெரிவித்தார்.
மேலும், மாநிலம் முழுவதும் ரூ.7,300 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு திரு மோடி அடிக்கல் நாட்டுவார் என்றும் ‘அமைதி மைதானத்தில்’ நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றுவார் என்றும் திரு கோயல் கூறினார்.
மணிப்பூர் வன்முறையில் குறைந்தது 260 பேர் உயிரிழந்ததுடன் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். இந்த வன்முறையால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சுராசந்த்பூரும் ஒன்று என்பதால், அந்த இடத்தைத் தேர்வுசெய்தது முக்கியத்துவம் வாய்ந்தது.
உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.30 மணியளவில் சுராசந்த்பூரிலிருந்து மணிப்பூர் தலைநகர் இம்பாலுக்கு திரு மோடி பயணம் மேற்கொள்வார். அங்கு ரூ.1,200 கோடி மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைப்பதுடன், பொது நிகழ்ச்சியிலும் அவர் உரையாற்றுவார்.
“மதிப்பிற்குரிய பிரதமரின் வருகை, மாநிலத்தில் அமைதி, இயல்புநிலை, வேகமான வளர்ச்சிக்கு வழிவகுக்கும். மாநில, இந்திய அரசு சார்பாக, மணிப்பூர் மக்கள் பிரதமரை மாநிலத்திற்கு வரவேற்க முன்வர வேண்டும் என்றும் நிகழ்ச்சிகளில் பேரளவில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்,” என்று திரு கோயல் கூறினார்.