புதுடெல்லி: கனடாவில் நடைபெற உள்ள ஜி7 உச்சநிலை மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) கனடா புறப்பட்டுச் செல்கிறார்.
இந்த அலுவல்சார்ந்த பயணத்தின்போது அவர் சைப்ரஸ் நாட்டுக்கும் செல்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறை ஜி7 உச்சநிலை மாநாட்டில் எரிசக்திப் பாதுகாப்பு, தொழில்நுட்பம், புத்தாக்கம் உள்ளிட்ட துறைகளில் உலக அளவில் உள்ள சிக்கல்கள் குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.
மாநாட்டின்போது, உலக நாடுகளின் தலைவர்கள் சிலருடன் மோடி முக்கியமான ஆலோசனைகளை மேற்கொள்வார் என்றும் கூறப்படுகிறது.
ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியப் பிரதமர் ஒருவர் சைப்ரஸ் நாட்டுக்குச் செல்வது இதுவே முதல்முறையாகும். அங்கு அந்நாட்டின் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துவார் என்றும் இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை அமையும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஜி7 அமைப்பில் அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா ஆகிய ஏழு நாடுகள் இடம்பெற்றுள்ளன.
அரசியல், பொருளியல், வணிகம், பாதுகாப்பு தொடர்பாக இந்த ஏழு நாடுகளுக்குப் பொதுவாக உள்ள அம்சங்கள் குறித்து விவாதித்து, அவற்றை மேம்படுத்துவதற்கான திட்டங்களை வகுக்கும் அமைப்பாக ஜி7 செயல்பட்டு வருகிறது.
கடந்த காலங்களில் இந்த மாநாட்டில் பிரதமர் மோடியும் சிறப்பு அழைப்பின்பேரில் சென்றிருந்தார். எனினும், இவ்வாண்டு கனடா அரசாங்கம் முறைப்படி அழைப்பு விடுக்காததால் மாநாட்டுக்குச் செல்லமாட்டார் எனக் கருதப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
ஆனால், கனடியப் பிரதமர் மார்க் கார்னியின் அழைப்பின்பேரில், திரு மோடி ஜி7 உச்சநிலை மாநாட்டில் பங்கேற்பார் எனப் பின்னர் அறிவிக்கப்பட்டது.