புதுடெல்லி: டெல்லியில் உள்ள சுஷ்மா ஸ்வராஜ் பவனில் பிரதமர் நரேந்திர மோடி தனது அமைச்சரவையில் முதன் முறையாக சேர்ந்த அமைச்சர்களை சந்தித்து உரையாடினார்.
இந்தச் சந்திப்பு 5 மணி நேரம் நீடித்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து கூறும் கவலறிந்த வட்டாரங்கள் அமைச்சர்கள் ஓய்வின்றி உழைக்க வேண்டும் என அறிவுறுத்தியதாகத் தெரிகிறது.
அத்துடன், “செயல், சீர்திருத்தம், மாற்றம், தகவல்” என்ற நான்கு புதிய தாரக மந்திரங்களை மக்கள் சேவையின்போது அமைச்சர்கள் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்று மோடி கூறினார்.
அரசின் செயல்பாடுகள், சாதனைகள், பிரசாரம், விளம்பரம் மற்றும் பிற முக்கிய பிரச்சினைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மத்திய அரசின் பொறுப்பான செயல்பாட்டை சமூக ஊடகங்கள் வழி மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று அமைச்சர்களிடம் பிரதமர் கேட்டுக்கொண்டார்.
அதேநேரம், சமூக ஊடகங்களில் மக்களின் பங்கேற்பையும் அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் கூறினார்.
பிரதமர் மோடியின் அரசு மூன்றாவது முறையாக பதவியேற்று 100 நாள் நிறைவடையும்போது தனித்தனி அமைச்சகங்களின் 10 முக்கிய முடிவுகள் குறித்து தகவல்களை வழங்கவும், அவற்றை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் வகையில் தெரிவிக்க அமைச்சர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், இந்தக் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் சமர்ப்பித்த வரவுசெலவு திட்ட அறிவிப்புகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு 10ஆம் ஆண்டு நிறைவை செப்டம்பர் 5ஆம் தேதி கொண்டாடும் வேளையில் பல்வேறு அமைச்சகங்களின் சார்பில் மக்கள் நலத்திட்டங்களை தொடங்கிவைக்க முடிவெடுக்கப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.