டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சி: கருத்துக்கணிப்புகள்

2 mins read
fa043cba-7e47-44f5-9da4-18848197dae2
பாஜக வெல்லும் என்பது பெரும்பாலான ஊடகங்களின் கணிப்பு. - படம்: தமிழக ஊடகம்

புதுடெல்லி: டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலில் வென்று 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சி அமைக்கும் என்று பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவித்து உள்ளன.

டெல்லி சட்டப்பேரவையின் பதவிக் காலம் இம்மாதம் 23ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால், மொத்தம் உள்ள 70 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் புதன்கிழமை (பிப்ரவரி 5) ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

1.56 கோடி வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு 13,766 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்தல் பாதுகாப்புப் பணியில் பாதுகாப்புப் படை வீரர்கள் ஆயிரக்கணக்கானோர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. மக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். மாலை 6 மணியளவில் வாக்குப் பதிவு நிறைவடைந்தது.

வாக்குப் பதிவு முடிவடைந்தவுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

இரவு 11.30 மணியளவில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையின்படி, டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலில் 60.42 விழுக்காடு வாக்குகள் பதிவாயின. 2020 சட்டப் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் 62.59 விழுக்காடு.

பெரிய வித்தியாசம் இல்லை என்றபோதிலும் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு வாக்குப்பதிவு சற்று குறைந்துள்ளது.

வழக்கம்போல இந்தத் தேர்தலிலும் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளிடையே போட்டி நிலவியது. குறிப்பாக, ஆம் ஆத்மிக்கும் பாஜகவுக்கும் இடையில் போட்டி கடுமையாகக் காணப்பட்டது.

வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை (பிப்ரவரி 8) நடைபெறுகிறது.

வாக்குப் பதிவு முடிவுற்றதும் மாலையில் கருத்துக்கணிப்புகளை வெவ்வேறு ஊடகங்கள் வெளியிடத் தொடங்கின.

2015, 2020 என தொடர்ந்து இருமுறை தேர்தலில் வென்று பத்தாண்டுகளாக ஆட்சி நடத்தி வரும் ஆம் ஆத்மி இம்முறை வெற்றியைப் பறிகொடுக்கும் என்று பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.

ஏறத்தாழ 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாரதிய ஜனதாக் கட்சி (பாஜக) டெல்லியில் 40 தொகுதிகளுக்கு மேல் வென்று ஆட்சியைப் பிடிக்கும் என்று அவை கூறியுள்ளன. ஆகக் கடைசியாக 1998ஆம் ஆண்டுவரை அந்தக் கட்சி டெல்லியில் ஆட்சி நடத்தியது.

2020 தேர்தலில் 62 தொகுதிகளைக் கைப்பற்றி மாபெரும் வெற்றிபெற்ற ஆம் ஆத்மி தற்போது 30 இடங்களுக்கும் குறைவாகவே பெறும் என்று சில கருத்துக்கணிப்புகள் குறிப்பிட்டுள்ளன.

இருப்பினும் வீபிரிசைட் (WeePreside), மைண்ட் பிரிங்க் (Mind Brink) போன்ற ஒருசில ஊடகங்கள் ஆம் ஆத்மி வெல்லும் என்று கணித்துள்ளன. அந்தக் கட்சி 46-52 இடங்களிலும் பாஜக 18-23 இடங்களிலும் வெற்றிபெறும் என்று வீபிரிசைட் கூறியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு பூஜ்ஜியம் அல்லது 1 தொகுதி கிடைக்கலாம் என்பது அதன் கணிப்பு.

இந்நிலையில், வாக்களிப்புக்குப் பிந்திய கருத்துக்கணிப்புகள் எப்போதும் ஆம் ஆத்மிக்கு எதிராகவே வெளிவருவதாக அந்தக் கட்சியின் பேச்சாளர் பிரியங்கா காக்கர் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்