புதுடெல்லி: இந்தியப் பிரதமர் மோடி மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களுக்காக ரூ.362 கோடி செலவிடப்பட்டுள்ளது.
2021 முதல் 2025 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்தத் தொகை செலவாகியுள்ளது.
ஆக அதிகமாக பிரான்ஸ் நாட்டுக்கு திரு மோடி மேற்கொண்ட பயணத்துக்காக ரூ. 25 கோடிக்கு மேல் செலவானதாக இந்திய அரசு தெரிவித்தது.
மாநிலங்களவையில் அளிக்கப்பட்ட தரவுகள் இவ்வாறு தெரிவிக்கின்றன.
பிரதமர் மோடி உள்நாட்டு விவகாரங்களைக் கவனிக்காமல் அடிக்கடி வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வதாக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். எனினும் திரு மோடியின் அனைத்துலகப் பயணங்கள் இந்திய வெளியுறவுக் கொள்கை அணுகுமுறையின் ஓர் முக்கியமான அங்கமாகத் தொடர்வதாக அரசுத்தரப்பு தெரிவிக்கிறது.
இந்தப் பயணங்களின் நிதி அம்சங்கள் அரசு, பொது மன்றங்களில் தொடர்ந்து கவனத்தையும் ஆய்வையும் ஈர்த்து வருகின்றன.
நடப்பு 2025ஆம் ஆண்டில் மட்டும், அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் போன்ற முக்கிய நாடுகளுக்கான உயர்மட்டப் பயணங்கள் உட்பட ஐந்து நாடுகளுக்கான இந்தியப் பிரதமரின் பயணங்களுக்கு ரூ. 67 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளது.
இந்தச் செலவு விவரங்களை, திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ’பிரையனின் கேள்விக்கு வெளியுறவு இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் அளித்த தமது பதிலில் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
மொரிஷியஸ், சைப்ரஸ், கனடா போன்ற நாடுகளுக்கு மேற்கொண்ட பயணங்களுக்கான புள்ளிவிவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
முந்திய ஆண்டுகளின் செலவினங்களைப் பொறுத்தவரை, 2024ஆம் ஆண்டில் ரஷ்யா, உக்ரேன் உட்பட 16 நாடுகளுக்குச் சென்ற பயணங்களுக்கு ரூ.109 கோடி செலவிடப்பட்டுள்ளது என்றும் 2023 ஆம் ஆண்டில் சுமார் ரூ. 93 கோடி செலவானது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
2022 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான செலவுகள் முறையே ரூ. 55.82 கோடி மற்றும் ரூ. 36 கோடி ஆகும்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவர்களுடனான சந்திப்புகள், பெரும்பாலும் வர்த்தகம், முதலீடு மற்றும் பாதுகாப்பு தொடர்பான விவாதங்களை உள்ளடக்கியவை என்றும் அவை இந்தியாவின் வளர்ச்சி, நிலைத்தன்மைக்கு முக்கியமானவை என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.